'Seeman has spoken out loud the truth that is known to the world' - Premalatha Vijayakanth's sensational interview Photograph: (dmdk)
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை பாரப்பத்தியில் நடைபெற்று இருந்தது. மாநாட்டில் பேசியிருந்த நடிகர் விஜய், ''எம்ஜிஆருடன் தனக்கு பழகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் எம்ஜிஆரை போன்றவர் விஜயகாந்த் அண்ணன். அவருடன் பழகுவதற்கு நிறைய வாய்ப்பு கிடைத்தது. மதுரையிலிருந்து அவரைப் பற்றி பேசாமல் இருக்க முடியாது'' என பேசி இருந்தார்.
விஜய்யின் இந்த பேச்சு குறித்து தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், ''விஜய், விஜயகாந்தை அண்ணன் என்கிறார். நாங்கள் விஜய்யை தம்பி என்கிறோம் அவ்வளவுதான்'' என்றார்.
அப்பொழுது செய்தியாளர்கள், 'தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமையுமா?' என்ற கேள்விக்கு, ''எதைச் சொன்னாலும் உடனே கூட்டணி என்ற அர்த்தம் கிடையாது. நாங்கள் தான் சொல்லி இருக்கிறோம் ஜனவரி ஒன்பதாம் தேதி மிகப்பெரிய மாநாடு நடத்த இருக்கிறோம். அந்த மாநாட்டில் தான் தேமுதிகவின் நிலைப்பாடு என்ன என்பதை நாங்கள் உறுதியாக சொல்ல இருக்கிறோம். விஜய்க்கும் இதேபோல ஒரு செய்தியாளர் சந்திப்பைக் கூட்டி நீங்கள் கேள்விகளை விஜய்யிடம் வையுங்கள். போட்டோ வைத்துக் கொள்கிறீர்கள் ஏன் அவர்களைப் பற்றி பேசவில்லை என்று விஜய்யிடம் தான் கேட்க வேண்டும். அதே மாதிரி சகோதரர் சீமான் சொல்லி இருக்கிறார் ஏன் இப்பொழுது விஜயகாந்த்க்கு வாய்ஸ் கொடுக்கிறீர்கள். கட்சி ஆரம்பிச்சாரு அப்போதெல்லாம் சொல்லவில்லை. அவர் உடல்நலம் சரியில்லாத போதெல்லாம் சொல்லாதவர் இப்பொழுது விஜயகாந்தை அண்ணன் என சொல்கிறார் என்று. எல்லா இடத்திலும் சீமான் பேசுவதை நான் பார்த்தேன். உலகம் அறிந்த உண்மையை சீமான் உரக்கச் சொல்லி இருக்கிறார். அதுதான் உண்மை. விஜய், விஜயகாந்தை அண்ணன் என்கிறார் எங்களைப் பொறுத்தவரை தம்பி என்கிறோம் அவ்வளவு தான்'' என்றார்.