Seeman criticizes TVk leader Vijay
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி கடந்த 18ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தவெக தலைவர் விஜய் பேசிய போது, திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார்.
அதில் அவர், “பெரியார் பெயரை சொல்லிட்டு கொள்ளையடிக்கிற இவர்கள் தான் நமது அரசியல் எதிரி. அரசியல் எதிரி என்பதும் கொள்கை எதிரி யார் என்பதும் உங்களுக்கு தெரிந்ததே எனக்கு போதும். அதனால் அவர்களை மட்டுமே எதிர்ப்போம். அதுவும் யார் இங்கு 2026 சட்டமன்றத் தேர்தலில் களத்தில் இருக்கிறார்களோ அவர்களை மட்டுமே எதிர்ப்போம். சும்மா களத்திலே இல்லாதவர்களையும், களத்திற்கும் அவர்களுக்கும் சம்பந்தமே இல்லாதவர்களையும் எதிர்க்கிற ஐடியா இல்லை. நீங்கள் கேட்டுட்டு இருக்கிற காரணத்திலாயே எதிர்க்க முடியாது.
எங்களுக்கு நிறைய வேலை இருக்கிறது. எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் ஒரே வார்த்தையில் சொல்லி இந்த திமுகவை காலி செய்தார்கள். ஏன் இவ்வளவு கோபத்தோடு திமுகவை அவர்கள் இருவரும் திட்டுகிறார்கள் என நான் கூட யோசிப்பேன். அவர்கள் இரண்டு பேர் சொன்னதை இப்போது நானும் திருப்பி சொல்றேன், திமுக ஒரு தீய சக்தி, திமுக ஒரு தீய சக்தி, திமுக ஒரு தீய சக்தி, தீய சக்தி. தவெக ஒரு தூய சக்தி. தூய சக்தி தவெகவுக்கும், தீய சக்தி திமுகவுக்கும் இடையில் தான் போட்டியே. மக்கள் விரோத சக்தி திமுக அரசை வீழ்த்த மக்கள் சக்தியான நம்மால் தான் முடியும்” என்று காட்டமாக விமர்சித்துப் பேசினார்.
விஜய் பேசியது குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், களத்தை பற்றி பேச விஜய்க்கு தகுதி இல்லை என்று விமர்சித்துள்ளார். திருச்சியில் நாம் தமிழர் கட்சி சார்பில் இளைஞர் பாசறை மாநில கலந்தாய்வு கூட்டம் இன்று (20-12-25) நடைபெற்றது. அந்த கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சீமானிடம், விஜய் பேசியது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த சீமான், “களத்தில் அவர் இருக்கிறாரா? கட்சி ஆரம்பித்து விக்கிரவாண்டி, ஈரோடு இடைத்தேர்தலில் அவர் ஏன் போட்டியிடாமல் போனார்?. ஈரோடு இடைத்தேர்தலில், திமுகவும் நாம் தமிழர் கட்சியும் தான் மோதியது. களத்துக்கு வராதவர், களத்தை பேசுவது தான் நகைச்சுவையாக இருக்கிறது. 2024 பாராளுமன்றத் தேர்தலில் உங்கள் கொள்கை எதிரியை வீழ்த்த நீங்கள் எவ்வளவு களத்துக்கு வந்தீர்கள்?. திமுக எதனால் தீய சக்தி என்று அவர் சொல்ல வேண்டும். திமுக தீய சக்தி என்பது இன்றைக்கு தான் அவருக்கு தெரிகிறதா? 2021ஆம் சட்டமன்றத் தேர்தலில், மறைமுகமாக வாக்கு கேட்கும் போது திமுக தீய சக்தி என்று அவருக்கு தெரியவில்லையா?” என்று விமர்சித்தார்.
Follow Us