ஐக்கிய நாடுகள் சபையின் அங்கமாக விளங்கும் யுனெஸ்கோ அமைப்பு, உலகம் முழுவதும் உள்ள புராதனச் சின்னங்களை அங்கீகரித்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி கோட்டை உட்பட நாடு முழுவதும் மராத்திய ஆட்சியாளர்கள் கட்டிய 12 கோட்டைகளைப் புராதனச் சின்னங்களின் பட்டியலில் சேர்க்க வேண்டும் என இந்தியா சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 47வது உலக பாரம்பரிய குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த 12 கோட்டைகளை யுனெஸ்கோவின் புராதன சின்னங்களின் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
அதன்படி செஞ்சிக்கோட்டைக்கு யுனெஸ்கோவின் அங்கீகாரம் கிடைத்தது. அதே சமயம் பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் செஞ்சி கோட்டையைத் தமிழர்களின் பாரம்பரியமான கோட்டை என்றும், மராட்டிய மன்னருக்குச் சொந்தமான கோட்டையில்லை என்றும் கூறி வருகின்றனர். அதோடு இந்த கருத்துகளை வலியுறுத்தி பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் இந்நிலையில் செஞ்சி கோட்டை ஆனந்த் கோணருக்கு சொந்தமான கோட்டை என்று வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நேற்று (17.08.2025) பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தில் சீமான் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அதாவது சீமானின் தனிப்பட்ட காவலர்களான பவுன்சர்களுக்கும் செய்தி சேகரிக்கச் சென்ற சில செய்தியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பவுன்சர்கள், செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்களைத் தடுத்து நிறுத்தியதோடு, தகாத வார்த்தையால் பேசியதாகக் கூறப்படுகிறது. அப்போது சீமான் மேடையில் இருந்து கீழே இறங்கி அடிப்பது போன்று ஆவேசமாகச் சென்றார். அப்போது போலீசார் செய்தியாளர்களைப் பாதுகாப்பாக அங்கிருந்து அழைத்துச் சென்றனர். அதன் பின்னர் மேடைக்கு வந்த சீமான் மீண்டும் பேசத் தொடங்கினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.