சீமைக்கருவேல மர அழிப்பு வழக்கு தீர்ப்புக்கு காத்திருப்பதாக துரை வைகோ எம்பி ஊடகங்களுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது...
தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீர்மட்டம் ஆகியவற்றை பாதிப்புக்குள்ளாக்கி, மனித குலத்திற்கும் கால்நடைகளுக்கும் கேடு விளைவிக்கும் சீமைக்கருவேல மரங்களை அழிக்கும் இயற்கை வளம் மட்டுமல்லாது எதிர்காலம் சமூதாயத்தைக் காக்கும் மகத்தான பணியை வைகோ தொடங்கி, தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றார்.
அழிவுகரமான சீமைக்கருவேல் மரங்களை வேரோடு பிடுங்கி அழிக்க வேண்டும் என்று, பத்தாண்டுகளுக்கு முன்பு, 10.09.2015 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வைகோ வழக்கு தாக்கல் செய்து, இவ்வழக்கில் அவரே வாதாடி வருகின்றார். இந்த வழக்கு பலநாட்கள் விசாரணைகள் முடிந்து இப்போது நாம் இறுதி தீர்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். இந்த வேலையில் இன்று இவ்வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தீர்ப்பளிக்கப்பட உள்ளது. இவ்வழக்கு, பல்வேறு வாயிதாக்களை, விசாரணைகளை, ஆய்வுகளை, உத்தரவுகளை, இடைக்கால தடை என பல நிலைகளை தாண்டி நடைபெற்று வருகிறது.
கடந்த 10.01.2017 அன்று நீதிபதிகள், இப்பணியை நீங்களும் உங்கள் இயக்க சகாக்களுடன் மேற்கொண்டு நீதிமன்றத்திற்கு உதவ வேண்டும் என வைகோவை கேட்டுக் கொண்டபோது, வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை அதிகார வரம்பு உள்ள 13 மாவட்டங்கள் மட்டுமின்றி, தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மதிமுக நிர்வாகிகள் முழு வீச்சில் களம் இறக்கியதோடு, வைகோவே சீமை கருவேல மரங்களை அழிக்கும் பணியில் நேரடியாக களத்தில் இறங்கி செயல்பட்டு, இத்தொடர் பணியில், இடையிடையே களைப்படைந்து, சீமைக்கருவேல மரத்தடியில் படுத்து ஓய்வெடுத்த நாட்களும் நம் கண் முன்னே தற்போது நிழலாடுகிறது.
தமிழகத்தின் அனைத்து அரசு இயந்திரங்களும் சீமைக்கருவேல் மரங்களை அகற்ற அதிதீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில், சென்னை IIT பகுதியில் வாழும் மான்கள் மற்ற சில உயிரினங்கள் சீமைக்கருவேல் மரங்களை அழித்தால் அழிந்து விடும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, 27.04.2017 அன்று, சீமைக்கருவவேல் மரங்களை அகற்றும் பணிகளுக்கு உயர் நீதிமன்றம் திடீர் இடைக்கால தடையை விதித்தது. அதனைத் தொடர்ந்து இடைக்கால தடைக்கு பின் பல ஆய்வு முடிவுகள் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்ற முழுஅமர்வு தடை நீங்கியது. முதற்கட்டமாக நீர் நிலைகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை படிப்படியாக அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அரசு இடங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை மாநகராட்சி அகற்ற வேண்டும். மேலும் தனியார் இடங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை நிலத்தின் உரிமையாளர்கள் அகற்ற வேண்டும். தனியார் இடங்களில் அகற்றவில்லை என்றால் அரசே அதை அகற்றி, அதற்கான செலவுத் தொகை போல் இரண்டு மடங்குத் தொகையை நிலத்தின் உரிமையாளர்களிடம் வசூல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தியிருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், என்.மாலா ஆகியோர் அடங்கிய முழு அமர்வில் மீண்டும் 2022ம் ஆண்டு விசாரணைக்கு வந்து, சீமைக்கருவேலம் உள்ளிட்ட அந்நிய மரங்களை அகற்றி, சுற்றுச்சூழலை மீட்டெடுக்க அரசு பிறப்பித்த அரசாணை வரவேற்று, சீமைக்கருவேல மரங்களை இயந்திரம் மூலமாக அகற்றி வருவதோடு, ரசாயன முறையிலும் அழிக்கும் பணி முன்னேற்றத்தில் உள்ளது. இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்தது.
அதன்பிறகு, கடந்த 2015-ம் ஆண்டு முதல் சீமைக்கருவேல மரங்களை அகற்ற உயர் நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்த போதிலும் அந்த உத்தரவுகள் இதுவரையில் அமல் படுத்தவில்லை என ஆதங்கம் தெரிவித்து இறுதியாக 10.10.2025 உத்தரவுக்காக ஒத்தி வைக்கப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, பின்னர் சென்னை முதன்மை அமர்வு என சுமார் 50 வாய்தாக்கள் நடந்துள்ளது. தமிழ் நாட்டின் உள்ள அனைத்து அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகளும் இணைந்து இவ்வழக்கில் செயல்பட்டனர். வழக்கில் 744 பிரதிவாதிகள் சேர்க்கப்பட்டு ஒரு மாபெரும் இயக்கமாக நடைபெற்றது.
இந்நிலையில் கடந்த வாரம் 27.02.2026 கூட இவ்வழக்கு நீதிமன்ற பரிசீலனையில் இருந்தது. இறுதி தீர்ப்பை எதிர் நோக்கி காத்திருந்த இவ்வேளையில் இன்று (06.03.2026) சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளிக்க தயாராகிறது.
சீமைக்கருவேலம் மட்டுமல்ல தலைவர் வைகோ முன்னெடுத்து வென்ற ஸ்டெர்லைட் நச்சு ஆலை அகற்றும் போராட்டமாகட்டும், நியூட்ரினோ திட்டத்தை நிறுத்தி வைத்திருப்பதாகட்டும், ஷேல் கேஸ் உள்ளிட்ட மண்ணை நஞ்சாக்கி மக்களின் வாழ்வை கேள்விக்குள்ளாக்கும் நாசகார திட்டங்களை எதிர்த்து பல்வேறு சட்டபோராட்டங்களையும், மக்கள் திரள் போராட்டங்களையும் நடத்தி வெற்றி பெற்றவர்தான் வைகோ. அவரது வெற்றி வரலாற்றில் இன்னொரு மைல்கல்லாக இந்த தீர்ப்பு இடம்பெரும் என்று நான் நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)
/nakkheeran/media/media_files/2026/03/06/aa-2026-03-06-15-00-15.jpg)