நாட்டின் 77வது குடியரசு தினம் வரும் திங்கட்கிழமை (26.01.2026) அன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் தலைநகரை பாதுகாப்பு வளையத்திற்குள் காவல்துறை கொண்டு வந்துள்ளது. இந்த விழாவில் 10000 சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் பிற நாடுகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்களும் கலந்துகொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் பொருட்டு, பல வகையான பாதுகாப்பு தொழில் நுட்ப கருவிகளும் அதிக அளவில் பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், நம் நாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக எல்லையில் ரோந்து பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதனால் இரவு பகல் பாராமல் இராணுவ வீரர்கள் ஜம்மு - காஷ்மீர் போன்ற எல்லைப்பகுதிகளை கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில் ஜம்மு காஷ்மீரின் டோடோ பகுதியில் பாதுகாப்பு பணிக்காக 17 இராணுவ வீரர்களை ஏறிக்கொண்டு பாதுகாப்பு வாகனம் ஒன்று சென்றது. அந்த சமயத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் அருகிலிருந்த 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 10 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும், 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராணுவ வீரர்கள் துரிதமாக செயல்பட்டு காயமடைந்த 7 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதே சமயம் உயிரிழந்த 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு, அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நாட்டு மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us