Secret information shared from Kochi to Pakistan via WhatsApp
கேரளா மாநிலம் கொச்சியில் கப்பல் கட்டும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இதில், ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர். இங்கிருந்து சிலர் பாகிஸ்தானுக்கு வாட்ஸ்அப் மூலமாக ரகசியமாகத் தகவல்களை அனுப்புவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நடத்தப்பட்ட சோதனையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதனிடையே, இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவர் இடுக்கி மாவட்டத்தின் மறையூர் பகுதியில் தலைமறைவாக இருப்பதாகக் கர்நாடக மாநில உடுப்பி மாவட்ட உளவுப் பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து கர்நாடக போலீசார், அப்பகுதியின் உள்ளூர் போலீசாருடன் சேர்ந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மறையூரில் தங்கிக் கட்டிட வேலை பார்த்து வந்த வடமாநில இளைஞர் ஒருவரைப் பிடித்து விசாரணை செய்தனர்.
அப்போது, அவர் மேற்குவங்கத்தைச் சேர்ந்த அலிப் இஸ்லாம் (21) என்பதும், அவர் முன்பாக கொச்சியில் கப்பல்கட்டும் தளத்தில் வேலை பார்த்ததும் தெரியவந்தது. அந்த சமயத்தில், அவர் பாகிஸ்தானுக்கு ரகசியத் தகவல்களை அனுப்பி உள்ளார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர். இது குறித்து, போலீசார் கூறுகையில், ‘அலிப் இஸ்லாம் கடந்த ஒரு மாதமாக மறையூரில் வாடகைக்கு வீடு எடுத்துக் கட்டிட வேலை பார்த்து வருகிறார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நான்காவது நபர் இவர். இந்த வழக்கு குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது’ என்று தெரிவித்தனர்.
Follow Us