சிவகாசியைச் சேர்ந்த செய்யது அலி பாத்திமாவின் கணவர் முபாரக் அலி 10 ஆண்டுகளுக்கு முன் சாலை விபத்தில் உயிரிழந்தார். இவருக்கு பர்வீன் (வயது 16) என்ற பெண் குழந்தையும் செய்யது பரூக் (வயது 11) என்ற ஆண் குழந்தையும் உள்ளது. கணவரை இழந்த செய்யது அலி பாத்திமா, சிவகாசியைச் சேர்ந்த அக்பர் அலி என்பவரைக் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து இரண்டாவது கணவராக ஏற்றுக்கொண்டார்.  

Advertisment

பட்டாசு ஆலை வேன் டிரைவரான அக்பர் அலி, சாலை விபத்தில் இறந்த பாத்திமாவின் முதல் கணவர் மூலம் கிடைத்த காப்பீட்டுத் தொகை ரூ.11 லட்சத்தைக் கேட்டு தொடர்ந்து தகராறு செய்து வந்திருக்கிறார். இதனால் கடந்த மாதம் கணவன் - மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு, செய்யது அலி பாத்திமாவை கடுமையாக அடித்துள்ளார். இதில், படுகாயம் அடைந்த செய்யது அலி பாத்திமா சிவகாசி நகர் காவல்நிலையத்தில் புகாரளிக்க, அக்பர் அலி கைது செய்யப்பட்டார். நிபந்தனை ஜாமீனில் சில நாட்களுக்கு முன் வெளிவந்த அக்பர் அலி, உறவினர் வீடுகளில் வசித்துள்ளார். அதேநேரத்தில், செய்யது அலி பாத்திமாவை குடும்பத்துடன் கொலை செய்வதற்கு தினமும் அந்த வீட்டை நோட்டமிட்டு வந்துள்ளார்.  கடந்த 23-ஆம் தேதி அதிகாலை செய்யது அலி பாத்திமா, தனது குழந்தைகளுடன் தூங்கிக்கொண்டிருந்தபோது பெட்ரோல் கேனுடன் அங்கு சென்ற

Advertisment

அக்பர் அலி, மனைவி மற்றும் குழந்தைகள் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். தீ பற்றிய நிலையில் அவர்கள் அலறித் துடிக்க, அக்பர் அலி மீதும் தீ பரவியுள்ளது. தீக்காயத்துடன் அருகிலுள்ள சிவகாசி நகர் காவல்நிலையத்துக்கு ஓடிச்சென்ற அக்பர் அலி, நடந்ததை தெரிவித்துள்ளார். அக்பர் அலி சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்க, அவர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.  

தீக்காயத்துடன் போராடிக்கொண்டிருந்த செய்யது அலி பாத்திமா, மகன் செய்யது பரூக், மகள் பர்வீன், பாத்திமாவின் தாயார் சிக்கந்தர் பீவி ஆகியோர் மீட்கப்பட்டு, சிவகாசி அரசு மருத்துவமனை தீக்காயப் பிரிவில் சேர்க்கப்பட்டனர். சிவகாசி டி.எஸ்.பி.அனில்குமார் நேரில் வந்து விசாரணை நடத்தினார். மகள் பர்வீன் 35 சதவீத தீக்காயங்களுடனும், மற்றவர்கள் 90 சதவீத தீக்காயங்களுடனும் சிகிச்சை பெற்று வருகின்றனர். பணத்துக்காக ஆத்திரப்பட்டு மொத்த குடும்பத்தையும் கொலை செய்ய முயற்சித்த கணவனின் வெறிச்செயல் 
கொடுமையாக உள்ளது.  

Advertisment