அமெரிக்காவின் மிசிசிபி மாநிலம், ஜாஸ்பர் கவுன்டியில் உள்ள இன்டர்ஸ்டேட் 59 நெடுஞ்சாலையில் அக்டோபர் 28 ஆம் தேதி மாலை 4:30 மணியளவில், மருத்துவ ஆராய்ச்சிக்காக குரங்குகளை ஏற்றிச் சென்ற டிரக் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த டிரக்கில் லௌசியானா மாநிலம், கோவிங்டன் பகுதியில் உள்ள துலேன் தேசிய உயிரியல் ஆராய்ச்சி மையத்தைச் (Tulane National Primate Research Center) சேர்ந்த 21 ரெசஸ் மாகாக் குரங்குகள் (Rhesus Macaques) இருந்தன. ஒவ்வொரு குரங்கும் சராசரியாக 7.2 கிலோ எடை கொண்டவை. மேலும் இந்தக் குரங்குகள் வைரஸ் ஆராய்ச்சி, மருந்து சோதனை போன்ற மருத்துவ ஆய்வுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்தன.
இந்த நிலையில் துலேன் உயிரியல் ஆராய்ச்சி மையத்தில் இருந்து வேறு ஒரு ஆராய்ச்சி மையத்திற்கு மாற்றப்படுவதற்காக தகுந்த பாதுகாப்புடன் டிரக்கில் ஏற்றிக் கொண்டு சென்றபோது விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் பல குரங்குகள் உயிரிழந்த நிலையில் 6 குரங்குகள் மட்டும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளன. அதில் 3 குரங்குகள் உடனடியாக மீட்கப்பட்டன. தப்பியோடிய 3 குரங்குகளை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதனிடையே விபத்து நடந்த பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோவில் சில குரங்குகள் அங்கிருக்கும் புல்வெளிக்குள் செல்வது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.
மிசிசிபி வனவிலங்கு மற்றும் மீன்வளத் துறை, துலேன் பல்கலைக்கழக விலங்கு பராமரிப்பு நிபுணர்கள் தப்பியோடிய குரங்குகளைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்தக் குரங்குகள் வைரஸ் ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்தப்பட்டதால், தேடுதல் குழுவினர் வெள்ளை கோட், கையுறை, தலைக்கவசம், முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உடைகளுடன் வயல்கள், காடுகள், அருகிலுள்ள பகுதிகளைச் சோதனை செய்து வருகின்றனர்.
முதலில் இந்தக் குரங்குகள் பல வைரஸ்களால் பாதிக்கப்பட்டவை என்றும், அதன் வாயிலாக ஹெபடிடிஸ் சி, ஹெர்பெஸ், கோவிட்-19 போன்ற தொற்றுகள் பரவ வாய்ப்பு இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனால் அந்தப் பகுதியினர் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. ஆனால், தற்போது அதனை முற்றிலுமாக மறுத்துள்ள துலேன் தேசிய உயிரியல் ஆய்வு மையம், சமீபத்தில் தான் இந்தக் குரங்குகள் அனைத்தும் பரிசோதனை செய்யப்பட்டு நோய்க் கிருமிகள் பாதிப்பில்லாதவை என்று உறுதி செய்யப்பட்டது. மேலும், இந்தக் குரங்குகளின் மூலம் நோய் பரவும் அபாயம் இல்லை என்று உறுதியளித்துள்ளது. அதேசமயம் அந்தக் குரங்குகளைப் பார்த்தால் யாரும் அதனை நெருங்கவோ, அல்லது தொடவோ கூடாது என்று எச்சரித்திருக்கிறது.
இதனிடையே உள்ளூர் காவல்துறையினர் உதவியுடன் ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு, அந்தப் பகுதிகளில் மருத்துவ நிபுணர்கள் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/31/untitled-1-2025-10-31-16-17-56.jpg)