பட்டியல், பழங்குடியின மக்களை இழிவுப்படுத்தும் விதமாக பேசிய அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை சத்யன் மீது தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.
பீகார் மாநிலத்தில் நவம்பர் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி, சில மாதங்களுக்கு முன்பு அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. அதில் பீகாரில் சுமார் 66 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை தேர்தல் ஆணையம் நீக்கியது. இந்த நடவடிக்கையால் பட்டியல், பழங்குடி மற்றும் சிறுபான்மையினரின் வாக்குரிமையை பறிப்பதாகக் கூறி எதிர்க்கட்சிகள் கடும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், பீகார் போன்று தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களிலும் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை வரும் நவம்பர் 4ஆம் தேதி முதல் மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கு திமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனால் அதிமுக, பா.ஜ.க ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பான விவாதம் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை தொடர்பான விவாதம் நடைபெற்றது. அந்த விவாவத்தில் அதிமுக சார்பில் கலந்து கொண்ட அக்கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் கோவை சத்யன் பங்கேற்று பேசினார். அப்போது அவர், “வாக்காளர்களை நேரில் பார்த்து இந்த நடவடிக்கையை எடுக்க போகிறோம் உங்களுடைய பிரதிநிதிகளை அனுப்புங்கள் என திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளிடம் தேர்தல் ஆணையம் கேட்கிறது. அதையும் மீறி வாக்காளர் பட்டியலில் இருந்து எப்படி ஒருவரை நீக்க முடியும்?. பெயரை பார்த்தவுடன் இவர் பட்டியலினத்தை சேர்ந்தவர், இவர் ஒடுக்கப்பட்டவர், இவர் நசுக்கப்பட்டவர், இவர் பிதுக்கப்பட்டவர் என்று சொல்ல முடியுமா?” என்று பேசினார். உடனடியாக தொலைக்காட்சி நெறியாளர், விவாதத்தில் பங்கேற்ற விசிக எம்.எல்.ஏ ஆளுர ஷா நவாஸ் ஆகியோர் கண்டித்தனர்.
இதையடுத்து கோவை சத்யன் பேசியது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பட்டியலின, பழங்குடியின மக்களை அதிமுக செய்தி தொடர்பாளர் ஒருவர் இழிவுப்படுத்தும் வகையில் பேசியுள்ளார் என பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை சத்யன் மீது தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் தெரிவிக்கப்பட்டுள்ள செய்தியில், ‘இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்வதற்கான முயற்சி எடுத்து வருகிறது. தீவிர வாக்காளர் திருத்த நடவடிக்கை குறித்து மாலை முரசு தொலைக்காட்சியில் 29.10.2025 அன்று இரவு 8.00 மணிக்கு நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்ற கோவை சத்யன், அ.தி.மு.க செய்தி தொடர்பாளர் மற்றும் ஐ.டி.விங் பொறுப்பாளர் “வாக்காளர் தீவிர திருத்த நடவடிக்கை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களை மட்டுமே பாதிக்கிறது என்று சொல்வது உண்மையல்ல. அரசு எப்போதெல்லாம் சட்டத்தை கொண்டு வருகிறதோ அப்போதெல்லாம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் நாங்கள் ஒதுக்கப்பட்டோம், பிதுக்கப்பட்டோம், நசுக்கப்பட்டோம் என்று கூச்சலிடுகிறார்கள்” என்று பேசினார்.
கோவை சத்யன் மேற்படி தொலைக்காட்சி பொதுவழி விவாதத்தின்போது பேசியது நம் நாட்டில் வாழும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களை இழிவுப்படுத்தும் வகையில் இருக்கிறது. அவரது பேச்சு வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989ன் கீழ் தண்டிக்கத்தக்க குற்றாகும். அதனால் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் தலைவர், முனைவர் நீதியரசர் ச.தமிழ்வாணன், துணைத் தலைவர், எழுத்தாளர் இமையம் (வெ.அண்ணாமலை), உறுப்பினர் மு.பொன்தோஸ் ஆகியோரை கொண்ட இவ்வாணையத்தின் சிறப்பு அமர்வு தாமாக முன்வந்து கோவை சத்யன் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்கிறது. அதன்படி, மாலை முரசு தொலைக்காட்சி அமைந்துள்ள சரகத்தின் காவல் துணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் சம்பந்தப்பட்ட கோவை சத்யன் மீது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுத்து, அதன் விபரத்தினை அறிக்கையாக இவ்வாணையத்திற்கு 10.11.2025-க்குள் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/30/kovai-2025-10-30-18-30-35.jpg)