Advertisment

புர்கா அணிந்து பயங்கரவாதிகளாகச் சித்தரித்த பள்ளி மாணவிகள்; சுதந்திர தின நிகழ்ச்சியில் சர்ச்சை!

bur

சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது நடத்தப்பட்ட நாடகத்தின் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

நாட்டின் 79வது சுதந்திர தின கொண்டாட்டம் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் குஜராத் மாநிலம் பாவ்நகரில் உள்ள தனியார் பள்ளியில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அந்த பள்ளியில் மாணவர்கள் நாடகம் ஒன்றை நடத்தியுள்ளனர். பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்டதாகக் கூறப்படும் அந்த நாடகத்தில், இஸ்லாமியர்களை பயங்கரவாதிகள் போன்று சித்தரிக்கும் காட்சிகள் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

அதாவது அந்த நாடகத்தில், வெள்ளை சல்வார் மற்றும் ஆரஞ்சு துப்பட்டா அணிந்த பள்ளி மாணவிகள், அமைதியான காஷ்மீரை விவரிக்கும் பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருக்கின்றனர். அடுத்த காட்சியில் பயங்கரவாதிகளை குறிக்கும் வகையில் பொம்மை துப்பாக்கிகளை ஏந்திய சில புர்கா அணிந்த மாணவிகள் உள்ளே நுழைந்து நடனமாடும் சிறுமிகளை நோக்கி சுடுகிறார்கள். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாதிகளை சித்தரிப்பதற்காக புர்கா அணிந்திருக்கும் காட்சிகள் அமைந்திருப்பதால் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது வகுப்புவாத மோதலை உருவாக்கும் என சிலர் விமர்சித்து வருகின்றனர்.  

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் சம்பந்தப்பட்ட பள்ளி முதல்வர் ராஜேந்திர டேவ் இந்த விவகாரம் குறித்து பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது, ‘இந்த நாடகம் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் ஆகியவற்றை மையமாகக் கொண்டது. இந்த நிகழ்ச்சியை பள்ளியின் கன்யா வித்யாலயா பிரிவைச் சேர்ந்த மாணவிகள் நடத்தினர். நாடகத்தில் சில மாணவர்கள், பயங்கரவாதிகளை சித்தரித்துள்ளனர், சிலர் வீரர்களாக நடித்துள்ளனர், மற்றவர்கள் பாதிக்கப்பட்ட பெண்களாக நடித்தனர். பயங்கரவாதிகளாக நடிக்க நியமிக்கப்பட்டவர்கள் கருப்பு ஆடை அணிய அறிவுறுத்தப்பட்டனர். இருப்பிஉம், அவர்கள் புர்காவைத் தேர்ந்தெடுத்தனர். எந்தவொரு சமூகத்தையும், குழுவையும் ஒருபோதும் காயப்படுத்துவது எங்கள் நோக்கம் அல்ல. சுதந்திர தினம் மற்றும் ஆயுதப்படைகள் மீதான மரியாதையை மாணவர்களிடையே வளர்ப்பதே இதன் நோக்கம்’ என்று கூறினார்.

இருப்பினும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடந்து வருவதாக பாவ்நகர் நகராட்சி தொடக்கக் கல்விக் குழுவின் நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். இது குறித்து அதிகாரி முன்ஜல் பால்தானியா, ‘வீடியோ விசாரணையில் உள்ளது. இடையில் விடுமுறை நாட்கள் இருந்தன. விசாரணை முடிந்ததும் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு காரண நோட்டீஸை அனுப்புவோம்’ எனத் தெரிவித்துள்ளார். 

viral video school student Hijab Gujarat independence day.
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe