கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் கடந்த ஜூலை 8ஆம் தேதியன்று தனியார் பள்ளி வேன் ஒன்று ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது, விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த பயணிகள் ரயில் தனியார் பள்ளி வேன் மீது மோதி தூக்கி வீசப்பட்டது.
இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மொத்தம் ஐந்து பேர் அந்த பள்ளி வேனில் பயணித்த நிலையில் ஆறாம் வகுப்பு மாணவன் நிமலேஷ், பதினொன்றாம் வகுப்பு மாணவி சாருமதி, செழியன் என மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. சம்பந்தப்பட்ட ரயில்வே கேட் பகுதியில் பணியிலிருந்த கேட் கீப்பர் பங்கஜ் சர்மா பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளார். இந்த சம்பவத்தில் விசாரணை நடத்த மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், கடலூரில் மீண்டும் இதே போன்ற சம்பவம் தற்போது நடந்துள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த பூவனூர் கிராமம் அருகே இன்று பள்ளி மாணவர்களை தனியார் வேன் ஒன்று ஏற்றிச் சென்றுள்ளது. அப்போது வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் ரயில் தண்டவாளத்தில் வேன் கவிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் வேனில் இருந்த 8 மாணவர்கள் காயமடைந்தனர்.
விபத்து ஏற்பட்ட போது ரயில் எதுவும் வராததால் நல்வாய்ப்பாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த விபத்தைக் கண்ட பூவனூர் கிராமக்களின் உதவியுடன் காயமடைந்த 8 மாணவர்கள் மீட்கப்பட்டு விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.