உத்தரப் பிரதேச மாநிலம், ஜகதீஷ்பூரைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர், செப்டம்பர் 20-ஆம் தேதி தனது நண்பர்களுடன் வெளியே சென்றிருந்தார். அப்போது, மதுராவில் உள்ள கார்கில் சதுக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது, இரு ஆண்கள் காரில் வந்துள்ளனர். அவர்கள் இருவரும் காரில் இருந்தபடியே, சாலையில் தனது சென்று கொண்டிருந்த இளம்பெண்ணைப் பார்த்து ஆபாசச் செய்கைகள் செய்துள்ளனர்.

Advertisment

பின்னர், அவர்களில் ஒருவர், "5 ஆயிரம் ரூபாய் தருகிறேன், வா... ஜாலியாக இருக்கலாம், வந்து வண்டியில் ஏறு" என்று கூறியிருக்கிறார். ஆனால், அந்தப் பெண் மறுத்துவிட்டு அங்கிருந்து நடந்து சென்றிருக்கிறார்.  விடாத அந்த நபர்கள் பின்னால் சென்று தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளனர். மேலும், ஒருவர் திடீரென காரில் இருந்து இறங்கி, துப்பாக்கியைக் காட்டி அந்தப் பெண்ணை மிரட்டியதோடு, காரில் இழுத்துச் சென்று ஏற்ற முயற்சித்துள்ளார். ஆனால், அந்தப் பெண் தைரியமாக காரின் சாவியை எடுத்ததுடன், தன்னைப் பிடித்த நபரை அடித்து உதைத்திருக்கிறார். மேலும், அந்தப் பெண்ணின் கூச்சலைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். அதனைப் பார்த்த அந்த இரு நபர்களும், ‘தப்பித்தோம், பிழைத்தோம்’ என்று தப்பியோடியுள்ளனர்.

இதனை அங்கிருந்த சிலர் வீடியோவாகப் பதிவு செய்த நிலையில், அது சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாகப் பரவியது. மேலும், வீடியோவில் அந்த நபர் கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு பெண்ணிடம் அத்துமீறியது பேசுபொருளாகவும் மாறியது. இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் சிகந்திரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், வீடியோவை அடிப்படையாகக் கொண்டு விசாரணையைத் தொடங்கினர்.

அதில், பெண்ணிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி அத்துமீறி நடந்து கொண்ட நபர், மதுராவில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வரும் ஷ்யாம்வீர் சிங் என்பது கண்டறியப்பட்டது. உடனடியாக விரைந்து சென்ற சிகந்திரா காவல் நிலைய போலீசார், ஆசிரியர் ஷ்யாம்வீர் சிங்கைக் கைது செய்தனர். அத்துடன், அவரிடமிருந்த உரிமம் பெற்ற கைத்துப்பாக்கியையும்  பறிமுதல் செய்தனர். மேலும், சம்பவத்தன்று அவருடன் இருந்த மற்றொரு நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வரும் நிலையில், கைது செய்யப்பட்ட ஷ்யாம்வீர் சிங்கிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisment

சம்பவம் குறித்து பேசிய மதுரா நகர உதவி காவல் கண்காணிப்பாளர் (DCP) சோனம் குமார், குற்றவாளியின் துப்பாக்கி உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும். சம்பவத்திற்கு காரணமான இருவரில் ஒருவரை கைதுசெய்துவிட்டோம்; மற்றொரு நபரை தேடி வருகிறோம். பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்படவுள்ளது. இருவருக்கும் உரிய தண்டனை பெற்றுத்தரப்படும்” என்றார்.

துப்பாக்கியைக் காட்டி தன்னை மிரட்டிய ஆணை அடித்து உதைத்த இளம்பெண்ணின் துணிச்சல் பலரால் பாராட்டப்பட்டாலும், இந்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிக அளவில் பதிவாகும் மாநிலங்களில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு, பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கியுள்ளதாக மேடைதோறும் பாஜக தலைவர்கள் பேசி வருகின்றனர். ஆனால், சிறுமிகள் முதல் வயதானவர்கள் வரை தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் நடந்து வருவதாக எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.