திருப்பூரில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் சிலர், தங்களை “டான்” போல காட்டிக் கொண்டு பள்ளி வளாகத்துக்குள்ளேயே செல்போனில் வீடியோ எடுத்து, அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மார்க்கெட் சாலையில் உள்ள கே.எஸ்.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த சில மாணவர்கள், பள்ளி நேரத்தில் கூட்டமாக நின்று கொண்டு, “கெத்து” காட்டுவது போலவும், தங்களை தாதா போல மிகைப்படுத்தி அட்ராசிட்டி பண்ணுவது போலவும் நடித்து, அதை தாங்களே மொபைலில் வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “மாணவர்கள் வகுப்பறைக்கு செல்போன் கொண்டு வரக்கூடாது; மீறினால் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் திருப்பித் தரப்பட மாட்டாது” என்று தெளிவாக அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து பல பள்ளிகளில் கடுமையான கண்காணிப்பும் விதிக்கப்பட்டது. ஆனால் இந்நிலையிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் செல்போன்களை பள்ளிக்கு எடுத்து வருவதும், அதைப் பயன்படுத்தி இது போன்ற ஆடியோ-வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றுவதும் தொடர்ந்து நடப்பதாகத் கூறப்படுகிறது.
பள்ளி வளாகத்தில் நடைபெறும் இது போன்ற செயல்கள் பள்ளி நிர்வாகத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பள்ளி நிர்வாகமும் கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது. செல்போன் மோகம் மாணவர்களிடையே அதிகரித்து வரும் நிலையில், பெற்றோர்களும் ஆசிரியர்களும் இது போன்ற செயல்களைத் தடுக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாக உள்ளது.
Follow Us