வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்துள்ள ஆசிரியர் நகர் பகுதியில் கோகுல் என்ற சிறுவன் வசித்து வருகிறார். இவர் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இத்தகைய சூழலில் தான் நேற்று முன்தினம் (10.11.2025) இவருடைய அக்காவின் போன் நம்பருக்கு வாட்ஸ்அப் மூலம் மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அதனை மாணவன் கோகுல் எடுத்துப் பார்த்துள்ளார். அதில், “உங்களுக்கு வெளிநாட்டில் இருந்து ஒரு 70 ஆயிரம் டாலர் வந்துள்ளது.
இதற்காக நீங்கள் சுங்க கட்டணமாக 45 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த மாணவன் கோகுல், அவரது அக்கா வங்கிக் கணக்கில் இருந்து முதன் முறையாக 5 ஆயிரம் ரூபாய் அனுப்பியுள்ளார். அதனைத் தொடர்ந்து 15 ஆயிரம் ரூபாய் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் என 3 தவணைகளில் மொத்தமாக 45 ஆயிரம் ரூபாய் அனுப்பியுள்ளார். அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக மெசேஜில் வந்த எண்ணைத் தொடர்பு கொண்டு கேட்டபோது உடனடியாக தங்களுக்கு பார்சல் வந்துவிடும் எனக் கூறியுள்ளனர்.
மேலும் அவர்கள் பணம் அனுப்பக் கூறி மெசேஜ் வந்துள்ளது. அதற்கு மாணவன் எங்களிடம் வேறு பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனையடுத்து மெசேஜ் செய்யப்பட்ட எண்ணை மர்ம நபர்கள் பிளாக் செய்துள்ளனர். அதே சமயம் பணம் அனுப்பியது குறித்து அவருடைய அக்காவிற்கு கோகுல் தெரிவித்துள்ளார். மேலும் குடியாத்தம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றுள்ளனர். அங்கிருந்த காவல் துறையினர் இது குறித்து சைபர் கிரைம் போலீசில் தான் புகார் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து உடனடியாக, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீசில் சிறுவன் கோகுலின் அக்கா புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் சிறுவன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இது போன்று வாட்ஸ்அப்பில் வரும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். என்னைப் போல் யாரும் போன்று பணத்தை அனுப்பி ஏமாற வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார். பள்ளி மாணவரிடம் சமூக வலைத்தளம் மூலம் 45 ஆயிரம் ரூபாய் டிஜிட்டல் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Follow Us