புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகில் உள்ள செய்யானம் ஊராட்சி கீழ ஏம்பல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 12 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் ஆவுடையார்கோயில் ஒன்றியம் வேங்காகுடி கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கியசாமி (வயது 58) என்பவர் தலைமை ஆசிரியராக உள்ளார். இத்தகைய சூழலில் தான் நேற்று (18.09.2025 - வியாழக்கிழமை) மதியம் பள்ளியில் 3ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ரவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (வயது 8) வகுப்பறையிலேயே இயற்கை உபாதை கழித்துவிட்டதாகத் தலைமை ஆசிரியர் கம்பால் அடித்து வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.
இதனால் அழுதுகொண்டே வீட்டிற்குச் சென்ற மாணவனிடம் அவனது தாயார் பொண்ணுத்தாய் என்ன என்று கேட்ட போது தலைமை ஆசிரியர் கம்பால் அடித்ததாகக் கூறியுள்ளான். மாணவன் சட்டையைக் கழற்றிப் பார்த்த தாய் பொண்ணுத்தாாய் அதிர்ச்சியடைந்துள்ளார். சிறுவன் முதுகு கழுத்துப் பகுதியில் கம்பால் அடித்த ரத்தக்கட்டு இருந்ததைப் பார்த்து தனது தம்பி சரத்குமாருடன் பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியரிடம் கேட்ட போது அங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த சிலர் தலைமை ஆசிரியருக்கு ஆதரவாகப் பேசி வாக்குவாதம் செய்துள்ளனர். இந்த நிலையில் பொண்ணுத்தாய் மற்றும் அவரது மகன் ரவி ஆகியோர் மணமேல்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து மீமிசல் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு விசாரணைக்குச் சென்ற போலீசாரிடம் தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமி தன் மகனைக் கம்பால் அடித்துள்ளார். அதனைக் கேட்கச் சென்ற என்னையும், என் தம்பி மற்றும் கணவரையும் அதே ஊரைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ், அவரது மகன் இவன் டயர்ஸ், மைக்கேல், பிரபு, சேவியர் ஆகியோர் தாக்கியதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். இந்த வாக்குமூலத்தைப் பெற்ற மீமிசல் போலீசார் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் கிராமத்தினர் 5 பேர் என 6 பேர் மீதும் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்பட ஏராளமான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆரோக்கியதாஸ் மற்றும் அவரது மகன் இவன் டயர்ஸ் ஆகிய இருவரைக் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.