மாதவிடாய் இருக்கிறதா? இல்லையா என்பதை சோதிக்க பள்ளி நிர்வாகம் ஒன்று, மாணவிகளின் ஆடைகளை அவிழ்த்து அவர்களின் அந்தரங்க உறுப்புகளை தொட்டு பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டம் ஷாஹாபூர் பகுதியில் ஆர்.எஸ் தாமணி என்ற தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இந்த சூழ்நிலையில், பள்ளி கழிவறையில் உள்ள தரையில் ரத்தக் கறைகள் இருப்பதை பராமரிப்பு ஊழியர்கள் பார்த்துள்ளனர். உடனடியாக இது குறித்து பள்ளி முதல்வரிடம் தெரிவித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து, 5ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கும் சிறுமிகளை பள்ளியின் மண்டபத்திற்கு பள்ளி முதல்வர் வரவழைத்துள்ளார். அவர்களிடம், கழிவறையில் உள்ள ரத்தக் கறைகளின் புகைப்படங்களை ப்ரொஜெக்டர் மூலம் திரையிட்டுக் காட்டி, யாருக்காவது மாதவிடாய் சுழற்சி நடக்கிறதா? என்று பள்ளி முதல்வர் விசாரித்துள்ளார். அதற்கு சில மாணவிகள் பதிலளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மாதவிடாய் இருப்பவர்கள், மாதவிடாய் இல்லாதவர்கள் என மாணவிகளை இரண்டு குழுக்களாக பள்ளி முதல்வர் பிரித்துள்ளார். மாதவிடாய் இருப்பதாகக் கூறிய அனைவரையும் தங்கள் கட்டைவிரல் ரேகையை கொடுக்குமாறு பள்ளி முதல்வர் உட்பட ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

ஆனால், தங்களுக்கு மாதவிடாய் இல்லை என்று கூறிய சிறுமிகளைப் பரிசோதிக்க ஒவ்வொருவராக கழிவறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு ஒரு பெண் உதவியாளர், மாணவிகளுக்கு மாதவிடாய் இருக்கிறதா? இல்லையா? என்பதை சோதனை செய்துள்ளார். சோதனையின் போது அவர், மாணவிகளின் அந்தரங்க உறுப்புகளையும் உள்ளாடைகளையும் தொட்டு சரிபார்த்தாகக் கூறப்படுகிறது. அதில், ஒரு மாணவி சானிட்டர் நாப்கினைப் பயன்படுத்தியிருப்பதை அந்த பெண் உதவியாளர் கண்டுபிடித்துள்ளார். அதை தொடர்ந்து, அந்த மாணவியை வரவழைத்து மற்ற மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் முன்னிலையில் பள்ளியில் முதல்வர் திட்டு அவமானப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த கொடூரச் சம்பவத்தில், பள்ளி மாணவிகள் அனைவரும் மன உளைச்சலுக்கு ஆளாகி தங்களிடம் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

Advertisment

இதனை கேட்டு கொதித்தெழுந்த பெற்றோர்கள், பள்ளி நிர்வாகம் மீதும் ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி முன்பு திரளாகக் கூடி போராட்டம் நடத்தத் தொடங்கினர். இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து மாணவிகளின் பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில், பள்ளி முதல்வர், 4 ஆசிரியர்கள் உட்பட மொத்தம் 8 பேர் மீதும் போக்சோ வழக்கின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், பள்ளி முதல்வரையும் பெண் உதவியாளரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.