வீட்டுப்பாடம் முடிக்காததால், 2ஆம் வகுப்பு படிக்கும் மாணவனை கயிறுகளால் கட்டி, ஜன்னலில் தலைகீழாக தொங்கவிட்டு தண்டனை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ஹரியானா மாநிலம் பானிபட்டில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களை ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கொடூரமாக தாக்கும் இரண்டு வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், 2ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் வீட்டுப்பாடம் முடிக்காததால் பள்ளி முதல்வர் ரீனா ஓட்டுநர் அஜய் என்பவரை அழைத்து அடிக்கக் கூறியதாகக் கூறப்படுகிறது. அதன்படி அஜய், அந்த மாணவனின் கன்னத்தில் அறைந்தார். மேலும் அவர், மாணவனை கயிறுகளால் கட்டி ஜன்னலில் தலைகீழாக தொங்கவிட்டுள்ளார். மற்றொரு வீடியோவில், பள்ளி முதல்வர் ரீனா சிறு குழந்தைகளை கொடூரமாக அறைந்து அடிக்கிறார்.

Advertisment

இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைகீழாக தொங்கவிடப்பட்ட மாணவனை சமீபத்தில் தான் பள்ளியில் சேர்க்கப்பட்டதாகவும், பள்ளி முதல்வரின் பெயரால் தான் அஜய் மகனை அடித்ததாகவும் மாணவரின் பெற்றோர் குற்றம் சாட்டினர். வீடியோ வெளியான பிறகு, அஜய் ஒரு குழுவை தங்கள் வீட்டிற்கு அனுப்பி மிரட்ட முயன்றதாக மாணவனின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். மேலும், சில நேரங்களில் தண்டனையாக கழிப்பறைகளை சுத்தம் செய்ய் மாணவர்களை கட்டாயப்படுத்தப்படுவதாகவும் பெற்றோர்கள் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில், பள்ளி முதல்வர், ஓட்டுநர் அஜய் ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisment