பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் புழு இருந்ததால் தட்டி கேட்ட பள்ளி முதல்வரை சமையலரை தாக்கிய சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தமிழ்நாட்டைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் இந்தியாவில் பல மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பா.ஜ.க மூத்த தலைவர் யோகி ஆதித்யநாத் ஆளும் உத்தரப் பிரதேச மாநிலத்திலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அம்மாநிலத்தில் கோரக்பூரில் உள்ள உஸ்வா பாபு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 16ஆம் தேதி வழக்கம்போல் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. அப்போது அந்த உணவில் புழுக்கள் இருந்துள்ளது. சமையலர்  குஞ்சா தேவி குழந்தைகளுக்கு உணவை பரிமாறியபோது, அவர்கள் அதை சாப்பிட மறுத்துவிட்டனர்.

Advertisment

இதனை கண்ட பள்ளி முதல்வர் ரீட்டா ஆர்யா, உணவில் புழு இருந்தது தொடர்பாக சமையலர் குஞ்சா தேவியிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றி கைகலப்பானது. அப்போது இருவரும் கட்டிப்புரண்டு ஒருவரை ஒருவர் சண்டையிட்டு கொண்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து இருவரையொருவர் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படவுள்ளதாக கல்வி அதிகாரி தீரேந்திர திரிபாதி தெரிவித்துள்ளார். விசாரணையைத் தொடர்ந்து, குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.