இந்து மாணவர்களை இஸ்லாமிய வசனங்களை ஓத வற்புறுத்துவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநில, கோட்டா நகரில் பக்ஷி ஸ்பிரிங்டேல்ஸ் என்ற பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த பள்ளியில் காலை தொழுகையின் போது இந்து மாணவர்களை ஓத வற்புறுத்துவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியானது. இந்த வீடியோ வைரலானதை அடுத்து, சர்ச்சை வெடித்தது.

இந்த காட்சிகள் பல ஆண்டுகளாக இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருவதாகவும், வருடாந்திர விழாவின் போது பதிவு செய்யப்பட்டவை என்றும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து பள்ளி இயக்குநர் தெரிவிக்கையில், ‘கடந்த 30 ஆண்டுகளாக அனைத்து மதங்களில் பிரார்த்தனைகளும் ஓதப்படும் ‘சர்வ தர்ம பிரார்த்தனை’ என்ற பாரம்பரியத்தை பள்ளி நிர்வாகம் கடைபிடித்து வருகிறது. நான் ஒரு ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி. எனது தந்தையும் ராணுவத்தில் பணியாற்றி மூன்று போர்களை சந்தித்துள்ளார். கல்விக்கு மதம் இல்லை. அனைத்து மதங்களையும் மதித்து நாங்கள் சர்வ தர்ம பிரார்த்தனை செய்கிறோம்’ என்று கூறினார்.

இதனிடையே, மத கருத்துக்கள் மாணவர்கள் மீது திணிக்கப்படுவதாகக் கூறி சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் பெரும் போராட்டங்கள் வெடிக்கும் என இந்து அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக, மாவட்ட கல்வித் துறை விசாரணை நடத்தி வருகிறது.