தேனி மாவட்டம், கோம்பை துரைச்சாமிபுரத்தைச் சேர்ந்த சந்திரன் - சுகன்யா தம்பதியரின் மகன் சாய் பிரகாஷ் (வயது 13), உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.
வழக்கம்போல், மாலை வேளையில் பள்ளி முடிந்த பிறகு, பள்ளியின் விளையாட்டுத் திடலில் சாய் பிரகாஷ் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது ஈட்டி எறிதல் போட்டிக்குத் தயாராகி வந்த கூடலூரைச் சேர்ந்த திபேஷ் என்ற கல்லூரி மாணவர் அதே விளையாட்டு மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக திபேஷ் எறிந்த ஈட்டி, அருகில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த சாய் பிரகாஷின் தலையில் தவறுதலாகக் குத்தியது. இதில் சாய் பிரகாஷ் பலத்த காயமடைந்தார். சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர்கள் அலறிய நிலையில், உடனடியாக வந்த ஆசிரியர்கள் சிறுவனைத் தூக்கிக்கொண்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர்.
கம்பம் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சாய் பிரகாஷ் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி சாய் பிரகாஷ் மூளைச்சாவு அடைந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.