புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மின்சாரம் தாக்கி எட்டாம் வகுப்பு பயின்று வந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் தேவர்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கமுத்து என்பவரின் மகன் செல்வக்கண்ணன்(13) இவர் சிலட்டூரில் உள்ள தாத்தா கருப்பையா வீட்டில் தங்கி அதே ஊரில் உள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வந்தார். நேற்று அறந்தாங்கி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பொழிந்த நிலையில் இன்று காலை வீட்டுக்கு அருகே இருந்த மின்கம்பம் அருகில் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஸ்டே கம்பியை பிடித்துள்ளார். அப்பொழுது அதில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் தூக்கி வீசப்பட்டார்.
உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் செல்வக்கண்ணன் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. அவருடைய சடலத்தை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்ப்பதற்கு சோகத்தை ஏற்படுத்தியது. ஸ்டேட் கம்பியில் மின்சாரம் வரக்கூடாது என்ற நிலையில் எவ்வாறு அதில் மின்சாரம் பாய்ந்தது என்பது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என அந்தப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பல இடங்களில் இதுபோன்று மின் கம்பங்கள் பராமரிக்கப்படாமல் இருப்பதால் மின் விபத்துகள் ஏற்படுவதாக அந்தப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.