காட்டுமன்னார்கோவிலில் அரசு உதவி பெறும் பருவதராஜ குருகுலம் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கியிருந்த மாணவர்களை, பள்ளி நிர்வாகி தனது ஜவுளிக்கடைக்கு மூட்டை தூக்க வைத்த சம்பவத்தைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இந்தப் பள்ளி, காட்டுமன்னார்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவர்கள் மற்றும் பெற்றோரை இழந்த மாணவர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதியில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.

Advertisment

பள்ளி நிர்வாகிக்கு, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், நெய்வேலி ஆகிய பகுதிகளில் "வி.பி.எஸ்." என்ற பெயரில் ஜவுளிக்கடைகள் உள்ளன. இந்நிலையில், காட்டுமன்னார்கோவில் நகரத்தில் உள்ள அவரது ஜவுளிக்கடையில், விடுதி மாணவர்களை இரவு நேரத்தில் சரக்கு வாகனத்தில் அழைத்து வந்து, துணி மூட்டைகளை இறக்கி, துணிகளை அடுக்க வைத்த சம்பவம் நடந்துள்ளது. இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Advertisment

இச்சம்பவத்தைக் கண்டித்து, நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, காட்டுமன்னார்கோவில் வட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், நகர செயலாளர் மணிகண்டன் தலைமையில், அக்டோபர் 14 அன்று வருவாய் வட்டாட்சியர் பிரகாஷிடம் மனு அளிக்கப்பட்டது. இதில் வட்டச் செயலாளர் தேன்மொழி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரகாஷ், வட்டக் குழு உறுப்பினர் தனபால், கிளைச் செயலாளர் நீலமேகன், கொளஞ்சி, சிறு குரு விவசாய சங்கத் தலைவர் இதயத்துல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், கட்சியின் சார்பில் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர்.

கல்வித்துறை அலுவலர்கள் கூறுகையில், "கல்வித்துறை, சமூக நலத்துறை, குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு அலுவலர்கள், விடுதி அலுவலர்கள் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினோம். மாணவர்கள் தாங்களாக விருப்பப்பட்டு வந்ததாகவும், துணி மூட்டைகளை தூக்கவில்லை என்றும் நிர்வாகி கூறுகிறார். இது குறித்த அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்துள்ளோம். அவர் தேவையான நடவடிக்கை எடுப்பார்," என்றனர்.

Advertisment