திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் ராஜஸ்தானை சேர்ந்த ஸ்ரீ பால்சிங் ஹார்ட்வேர்ஸ் கடை ஒன்றை நடத்தி வருகிறார். அந்தக் கடையில் இரண்டு நபர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை (29-01-26) அன்று இந்த கடைக்கு ஒரு வயதான பெண் சாமியார் வந்துள்ளார். அவர், கடை உரிமையாளரிடம், தானும் ராஜஸ்தான் தான் என அறிமுகம் செய்துகொண்டார். இதையடுத்து, குடிப்பதற்கு தண்ணீர் தருமாறு கேட்டுள்ளார். கடையில் பணிபுரியும் நபர்களும் அவருக்கு அருந்த தண்ணீர் கொடுத்துள்ளனர். அடுத்ததாக, தேநீர் வேண்டுமென்று கேட்டுள்ளார். பின்னர் தேநீரும் வாங்கி கொடுத்துள்ளனர்.
இதையடுத்து, அங்கிருந்த சாமி படத்தின் மீதிருந்த பூவை எடுத்து தருமாறு கேட்டுள்ளார். அவர்களும் எடுத்து கொடுத்துள்ளனர். பூவை கையில் வாங்கிய, அந்த பெண் சாமியார் ஏதோ மந்திரம் செய்து பூவை குங்குமமாக மாற்றியுள்ளார். இந்த மந்திர வித்தையை கண்டு அவர்கள் அனைவரும் ஆச்சரியத்தில், தன்னிலை மறந்து நின்றுள்ளனர். பின்னர் அந்த சாமியார், தன்னை பேருந்து நிலையத்தில் விட்டுவிடுமாறு அவர்களிடம் கூறியுள்ளார். அவர்களும் அந்த பெண் சாமியாரை அவர்களது வண்டியிலேயே பேருந்து நிலையத்திற்கு அழைத்துச் சென்று விட்டுள்ளனர்.
பின்னர், ஸ்ரீபால்சிங் கல்லாப்பெட்டியை பார்த்தபோது அதிலிருந்த 85000 ரூபாய் காணாமல் போனதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது, அந்த பெண் சாமியார் தன் கையில் இருந்த குங்குமத்தை அவர்கள் நெற்றியில் வைத்த பிறகு, சாமியார் சொல்வதையெல்லாம் மெய்மறந்து அவர்கள் கேட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அந்த சாமியார் அவர்களிடம் பணத்தை கேட்க, தன்னிலை மறந்த நிலையில் இருந்த அக்கடையின் ஊழியர்களே, பணத்தை சாமியாரிடம் எடுத்துகொடுக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த, ஸ்ரீ பால்சிங் பொன்னூர் காவல் நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், 65 வயது மதிக்கத்தக்க அந்த பெண் மூதாட்டி ராஜஸ்தானை சேர்ந்தவர் என்பதும், அவர் ராஜஸ்தானில் இருந்து வந்து இங்கு பிழைப்பு நடத்தி வருபவர்களை குறித்து, சாமியார் வேடத்தில் சென்று அவர்களிடம் தொடர்ச்சியாக நூதன மோசடியில் ஈடுபட்டு வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/03/821-2026-02-03-08-10-38.jpg)