Advertisment

பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து; ஒருவர் உயிரிழப்பு!

sivakasi-incident

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான பட்டாசு தயாரிப்பு ஆலைகள் அமைந்துள்ளன. பல்லாயிரக்கணக்கானோர் இந்த ஆலைகளில் பணியாற்றி வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் இங்குள்ள பட்டாசு ஆலைகளில் அடிக்கடி வெடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்வது தொடர் கதையாகி வருகிறது. இத்தகைய சூழலில் தான் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கங்கர் செவல்பட்டி என்ற கிராமத்தில் மாரிமுத்து என்பவருக்குச் சொந்தமான தனியார் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. 

Advertisment

இந்த பட்டாசு ஆலையில் இன்று (17.09.2025) வழக்கம் போல் பணிகள் நடைபெற்று வந்தன. இதில் பல்வேறு தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது பட்டாசு தயாரிப்பதற்கு ரசாயன மூலப்பொருட்களை கொண்டு கலவையைத் தயாரிக்கும்போது யாரும் எதிர்பாராத விதமாக பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதி முழுவதுமே கரும்புகை சூழ்ந்து காணப்படுகிறது. அதோடு பட்டாசு ஆலையின் அறைகள் முற்றிலுமாக இடிந்து தரைமட்டமானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த வெடி விபத்திற்கான காரணம் குறித்து போலீசாரின் முழு விசாரணைக்குப் பின்னரே தெரியவரும் எனக் கூறப்படுகிறது. 

இந்த விபத்தில் சிக்கிய பெண் தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 8 பேர் காயம் அடைந்தனர். ஒருவர் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக ஆலையின் போர்மேன் சோமசுந்தரம் என்பவரை போலீசார் கைது செய்து ஆலங்குளம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி பெண் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

வெடி விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையின் உரிமத்தைத் தற்காலிகமாக ரத்து செய்து வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதோடு சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் துறையினர் விபத்திற்கான காரணம் குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் ஆலையில் உரிமையாளர், மேலாளர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்வதற்கான நடவடிக்கையை காவல்துறையினர் மேறகொண்டு வருகின்றனர்.

Virudhunagar incident crackers plant sattur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe