தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருவள்ளூரை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில் தொடங்கினார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள  நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இந்த போராட்டமானது தொடங்கி நடைபெற்றது. தொடர்ந்து மூன்றாவது நாளாக உண்ணா நிலையில் சசிகாந்த் உள்ளார். இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய ஆதரவைத் தெரிவித்து இருந்தார்.

தொடர்ந்து திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவர்கள் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு உண்ணாவிரதப் போராட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என தெரிவித்தும் ஏற்காத சசிகாந்த், தொடர்ந்து  உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

ராகுல்காந்தியே போனில் தொடர்பு கொண்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் மாற்றுக்கட்சியினர் கூட சசிகாந்த் செந்திலின் போராட்டத்தை ஆதரித்து வருகின்றனர். ஆனால் சொந்தக் கட்சியான தமிழக காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஒருவர் கூட இப்போராட்டத்தை ஆதரிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம் தற்போதைய தமிழக காங்கிரஸ் தலைமைக்கும் சசிகாந்த் செந்திலுக்கமான உட்கட்சி பிரச்சனை என்று கூறப்படுகிறது.

Advertisment

செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையிடம் சசிகாந்த் செந்திலின் இந்த போராட்டம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதிலானது மேலும் சர்ச்சைகளைக் கூட்டியுள்ளது. ''உண்ணாவிரதப் போராட்டத்தை உடனடியாக முடித்துக் கொள்ள வேண்டும். தற்பொழுது ராகுலின் வாக்காளர் அதிகாரம் பேரணி நடைபெற்று வரும் நிலையில் அதை மடைமாற்றம் செய்யும் செயலாக இதைப் பார்க்கக்கூடும்'' என தெரிவித்துள்ளார். 

மாநில நலன் சார்ந்து போராட்டத்தை முன்னெடுத்திருக்கும் சொந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாராட்டாமல் போராட்டத்தை நீர்த்துப் போகும் வகையில் செல்வபெருந்தகை பேசியுள்ள இந்த கருத்து குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு உள்ளடியில் இருப்பது தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைமைக்கான அதிகார மோதலே என சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.