Advertisment

“செங்கோட்டையனை நீக்கியிருப்பது சிறுபிள்ளைத்தனமான செயல்” - சசிகலா

sasikala

Sasikala said Removing Sengottaiyan is a childish act

முத்துராமலிங்க தேவரின் 63வது குருபூஜை நிகழ்ச்சி ராமநாதபுரத்தில் உள்ள பசும்பொன்னில் நேற்று நடந்தது. அந்த நிகழ்ச்சியில், அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்ற ஒற்றை கருத்தை தெரிவித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகிய மூவரும் பங்கேற்று கூட்டாக முத்துராமலிங்க தேவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோருடன் சேர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முத்துராமலிங்க தேவருக்கு கூட்டாக  மரியாதை செலுத்தியது மட்டுமல்லாமல் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

Advertisment

இதனால், கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்குவதாகக் கூறி அதிமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையனை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கியுள்ளார். எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கிய காலத்திலேயே அவருடைய சட்டமன்றக் குழுவில் எம்.எல்.ஏவாகவும், ஜெயலலிதாவின் தலைமையிலான அதிமுகவில் பல முக்கிய பதவிகளில் வகித்து வந்த செங்கோட்டையனை, அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கியிருப்பது தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது.      

Advertisment

இந்த நிலையில், செங்கோட்டையனை கட்சியில் இருப்பது வேதனையளிப்பதாக சசிகலா தெரிவித்துள்ளார். இது குறித்து சசிகலா தனது எக்ஸ் பக்கத்தில், “கழக மூத்த முன்னோடியும், கழக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான அன்பு சகோதரர் செங்கோட்டையனை கழகத்திலிருந்து நீக்கியிருப்பதாக வரும் செய்திகள் மிகவும் வேதனையளிக்கிறது. இது ஒரு சிறுபிள்ளைத்தனமான செயலாகத்தான் பார்க்கமுடிகிறது. இன்றைக்கு யாராக இருந்தாலும் கட்சியை வளர்ப்பதை விட்டுவிட்டு, அழிக்கின்ற செயல்களில் ஈடுபடுவது மன்னிக்கமுடியாத செயலாகும். இது மிகவும் கண்டனத்திற்குரியது. அன்பு சகோதரர் செங்கோட்டையன் போன்றோர் எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து தொடர்ந்து இந்த கட்சியின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவர். இது போன்ற கட்சிக்கு பாதகமான நடவடிக்கைகள் மூலம் திமுகவினரின் ஆசைதான் நிறைவேறியிருப்பதாக தெரிகிறது. இதைத்தான் திமுகவினர் அனுதினமும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

கழகத்தை அழிக்க துடிக்கும் திமுகவினரின் எண்ணத்திற்கு வலு சேர்த்திடும் வகையில் நம் கழகத்தினரே செயல்படுவது மிகவும் வேதனையாக இருக்கிறது. இது போன்ற செயல்கள்  ‘நுனிக்கிளையில் அமர்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டுவது’ போன்றது. இது அதிமுக என்ற ஆலமரத்திற்கே கேடாக அமைந்து விடும். இது போன்ற மனப்பாங்கினை திருத்திக்கொள்ள வேண்டும், இல்லையென்றால் கழகத்தொண்டர்களால் திருத்தப்படுவது நிச்சயம் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

கழகம் ஒன்றிணையவேண்டும், மீண்டும் கழக ஆட்சி அமையவேண்டும் என்பதுதான் ஒவ்வொரு அடிமட்ட தொண்டர்களின் எண்ணமாக இருக்கிறது. தமிழக மக்களின் விருப்பமும் இதுதான். நானும் இதைத்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால், கழகம் ஒன்றிணைவதற்கு யார் இடையூறாக இருந்தாலும் அவர்கள் திமுக என்ற தீயசக்திக்கு மறைமுகமாக உதவி செய்பவர்களாகத்தான் கருதமுடியும். எனவே, திமுகவின் கோரப்பிடியிலிருந்து தமிழகத்தை மீட்டெடுக்க ஒன்றுபட்ட வலிமைமிக்க அதிமுகவாக அனைவரும் ஓரணியில் திரள்வோம். திமுக தலைமையிலான மக்கள் விரோத ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப அனைவரும் ஒன்றுபடுவோம் வென்று காட்டுவோம் என்பதை இந்நேரத்தில் மீண்டும் வலியுறுத்துகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். 

sasikala sengottaiyan admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe