திருநெல்வேலியில் தமிழக பா.ஜ.க சார்பில் இன்று (22-08-25) பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடைபெறவுள்ளது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி ஆகிய 5 நாடாளுமன்றத் தொகுதிகளில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான பூத் கமிட்டி மாநாடு, தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Advertisment

இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நெல்லைக்கு வருகை தரவுள்ளார். கொச்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்றப் பிறகு அங்கிருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு இன்று பிற்பகல் அமித் ஷா வருகிறார். நெல்லை தச்சநல்லூரில் பிற்பகல் 3:30 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்கும் அமித் ஷா, நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், பா.ஜ.க பூத் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்பதற்காக பா.ஜ.க நிர்வாகியும், நடிகருமான சரத்குமார் திருநெல்வேலி சென்றுள்ளார். அங்கு அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசும்போது விஜய்யின் மதுரை மாநாடு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “பா.ஜ.கவை விஜய் பாசிசம் என்கிறார். பாசிசம் என்றால் என்னவென்று அவருக்கு தெரியுமா? எனத் தெரியவில்லை. நடிகர்கள் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன். நடிகர் மட்டுமல்ல எல்லோரும் அரசியலுக்கு வரலாம். அரசியலுக்கு வந்த பின்பு அரசியல் பாடம் கற்றுக்கொண்டு என்ன பேசுகிறோம்?. எதற்காக பேசுகிறோம்? என்பதை புரிந்து கொண்டு கொள்கை ரீதியாக பேச வேண்டும். மிஸ்டர். பிரைம் மினிஸ்டர் என்று சொல்லக்கூடிய அளவுக்கு விஜய் வளரவில்லை” என்றுக் கூறிச் சென்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு நேற்று (21.08.2025) மதுரை மாவட்டம் பாரபத்தி கிராமத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. சுமார் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்ற மாநாட்டில் விஜய்யின் பேச்சு தற்போது தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது. குறிப்பாக திமுக, பா.ஜ.க ஆகிய இரண்டு கட்சிகளை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தது விவாதப்பொருளாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.