தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு கடந்த 21ஆம் தேதி மதுரை மாவட்டம் பாரபத்தி கிராமத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. சுமார் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்ற மாநாட்டில் விஜய்யின் பேச்சு தற்போது தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியது. குறிப்பாக திமுக, பா.ஜ.க ஆகிய இரண்டு கட்சிகளை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தது விவாதப்பொருளாக மாறியது.
மாநாட்டில் பேசிய விஜய், “மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களே, மக்களுக்கு உங்களுக்கு கேட்பதற்கு நிறைய கேள்விகள் இருக்கிறது. உங்களது முரட்டு பிடிவாதத்தால் நீட் தேர்வு நடக்கிறது. நீட் தேர்வால் இங்கே நடப்பதை சொல்லவே மனது வலிக்கிறது. அதனால் நீட் தேர்வை தேவையில்லை என் அறிவித்துவிடுங்கள் அது போதும். செய்வீர்களா திரு நரேந்திர பாய் தாமோதர மோடி ஜி அவர்களே?.” என்று பேசினார்.
இந்த நிலையில், விஜய்யின் பேச்சுக்கு பா.ஜ.க நிர்வாகியும், நடிகருமான சரத்குமார் கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாமல் அவரை கடுமையாக விமர்சித்துப் பேசியுயுள்ளார். தனது பிறந்தநாளை முன்னிட்டு சரத்குமார் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “அண்மையில் கத்துக்குட்டியான ஒருவர் மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் என்று அழைக்கிறார். மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் என்று அழைப்பதில் தவறில்லை. நீங்கள் கொடநாட்டிலே தெருவிலே நின்று கொண்டிருக்கும் போது மிஸ் ஜெயலலிதா ஜெயராம் என்று சொல்லி இருப்பீங்களா? சொல்லி பாருங்களேன்... தன்மையற்று பேசியதால் அவரை பற்றி நான் பேசுகிறேன். நமது முதலமைச்சரை தாய் மாமன் அப்படி என்று அழைக்கிறார். அங்கிள் என்று அழைக்கிறார், அழைப்பதில் தவறில்லை. ஆனால் தரம் என்று ஒன்று இருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்... நீங்கள் அந்த மனிதருக்கு மரியாதை கொடுக்கிறீர்களோ இல்லையோ அந்த பதவிக்கு மரியாதை கொடுத்தாக வேண்டும். அந்த தரத்தை கற்றுக்கொள்ளுங்கள் விஜய் அவர்களே..
நானும் பலரை சந்தித்து வந்தவன் தான்.. கல்லூரியில் படித்திருக்கிறேன் கல்லூரியில் ரவுடிசத்தை பார்த்திருக்கேன், எல்லாம் பார்த்திருக்கேன். ஆனால் தரம் இருக்க வேண்டும், நியாயம் இருக்க வேண்டும், தர்மம் இருக்க வேண்டும் உண்மை இருக்க வேண்டும். நீட் வேண்டாம் என்று சொல்கிறீர்கள். நீட்டால் பயணாளிகள் இல்லையா?. நீட்டை கொண்டு வந்தது யார்? திமுக தான் கொண்டு வந்தது என உங்களுக்கு தெரியாதா?. தகுதி இருப்பவர்கள் பதவிக்கு வர வேண்டும். தகுதி உள்ளவர்கள் அந்த பணிக்கு செல்ல வேண்டும். பாசிச அரசு என்கிறார். என்னுடைய அருமை நண்பர் விஜய்க்கு பாசிசம் என்றால் என்னவென்று தெரியாது என்று எனக்கு தெரியும். இஸ்லாமியருக்கு எதிராக மோடி இருக்கிறார் என்று சொல்கிறார். அப்படியென்றால் காஷ்மீரில் 25 தொகுதியில் ஜெயித்தார்களே எப்படி?.
என்னுடைய இஸ்லாமிய சகோதர சகோதரிகளை கேட்கின்றேன். மோடியின் 12 ஆண்டுகால ஆட்சியில் எங்காவது ஒரு மசூதியை இடித்து தரைமட்டமாக்கி இருக்கிறார்களா?. சுப்ரீம் கோர்ட் ஆர்டர் கொடுத்தாங்க. ராமர் கோயிலும் கட்டப்பட்டது, மசூதியும் கட்டப்பட்டது. நீங்கதான் மதவாத உணர்வை தூண்டி கொண்டிருக்கிறீர்கள். இங்கே எல்லாம் ஒற்றுமையாதான் இருக்காங்க. ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் என்று சொன்னால் அது உண்மையாகிவிடாது.
இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவரும் மோடியின் சிறந்த ஆட்சியை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தேவையற்ற அந்த காட்சியை மாற்றுவதற்காக முற்படாதீர்கள், விளைவுகளை சந்திக்க வேண்டிய நேரம் வரும். 832 மீனவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்கிறார். இந்த 12 ஆண்டுகால ஆட்சியில் ஒரு மீனவர் கூட மரணமடையவில்லை. உங்களிடம் தரவு இருக்கிறதா விஜய்? ஒரு உன்னத தலைவரை இழிவுப்படுத்தாதே?. கச்சத்தீவை மீட்டு தாருங்கள் என்கிறார். ஐயா கச்சத்தீவை தாரை வார்த்தது யாருயா? 1974ஆம் ஆண்டு இந்திரா காந்தி பண்டாரநாயக அம்மாவோட ஒரு ஒப்பந்தம் போடுறாங்க. கலைஞர் குரல் கொடுத்திருந்தால், இது நடக்கக்கூடாது, இது ஒருபடி மண்ணை நாங்கள் கொடுக்க தயாரில்லை என்று சொல்லி இருந்தால் அன்று கச்சத்தீவை தாரைவார்த்து கொடுத்திருக்க மாட்டார்கள். ஆனால் ஒருவரே ஒருவர் அது கொடுக்க கூடாது என்று குரல் கொடுத்தவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? அடல் பிகாரி வாஜ்பாய்... ஒந்த தகவல் உங்களுக்கு தெரியுமா விஜய்?. தவறான செய்திகளை பரப்பிக் கொண்டிருக்கிறார்” என்று ஆவேசமாகப் பேசினார்.