Advertisment

வாக்கெடுப்பில் பறிபோன சேர்மன் பதவி; வீசப்பட்ட வாக்குப் பெட்டி - பெண் சேர்மனின் அடாவடி!

92

வாக்கெடுப்பில் பறிபோன சேர்மன் பதவி... வீசப்பட்ட வாக்குப் பெட்டி... பெண் சேர்மனின் அடாவடி.. என்று சங்கரன்கோவில் நகராட்சியே வெடவெடத்து கிடக்கிறது.

Advertisment

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகராட்சியில் தி.மு.க.வைச் சேர்ந்த சேர்மன் உமா மகேஷ்வரிக்கு எதிராக ஊழல், டெண்டர் முறைகேடு மற்றும் வார்டு அடிப்படைப் பணிகளைப் புறக்கணித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை எழுப்பி, தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த 24 கவுன்சிலர்கள் இணைந்து நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தனர். 30 கவுன்சிலர்களைக் கொண்ட இந்த நகராட்சியில், தி.மு.க.விற்கு 17 உறுப்பினர்களும், அ.தி.மு.க.விற்கு 13 உறுப்பினர்களும் உள்ளனர். இந்தத் தீர்மானத்திற்கு தி.மு.க.வைச் சேர்ந்த 11 கவுன்சிலர்களும் ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisment

93

ஜூலை 2 ஆம் தேதி கமிஷனர் நாகராஜ் தலைமையில் நடைபெற்ற மன்றக் கூட்டத்தில், இந்தத் தீர்மானம் குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு, 28 கவுன்சிலர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இதனால் உமா மகேஷ்வரி தனது சேர்மன் பதவியை இழக்க நேரிட்டது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்த உமா மகேஷ்வரி, குரல் வாக்கெடுப்பு சட்டவிரோதமானது எனவும், ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

96

இந்த மனுவை விசாரித்த மதுரை உயர் நீதிமன்றக் கிளை, ஜூலை 17 ஆம் தேதி ரகசிய வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது. அதன்படி, ஜூலை 17 ஆம் தேதி பொறுப்பு கமிஷனர் நாகராஜ் தலைமையில் நடைபெற்ற மன்றக் கூட்டத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த உமா மகேஷ்வரி, கமிஷனரின் முன் வைக்கப்பட்டிருந்த வாக்குப் பெட்டியைத் தள்ளிவிட்டு, "இதை நீங்கள் நடத்தக் கூடாது; வேறு ஒரு கமிஷனர் நடத்த வேண்டும். காலை 11 மணிக்கு நடத்த வேண்டிய வாக்கெடுப்பை 11:27க்கு நடத்துகிறீர்கள். அதனால், உங்கள் மீது நம்பிக்கையில்லை" என வாதிட்டுள்ளார். இதனால் அரங்கில் அமளி ஏற்பட்டது. ஒருவழியாக அமளி அடங்கிய பின், ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 28 கவுன்சிலர்கள் தீர்மானத்திற்கு ஆதரவாகவும், 2 கவுன்சிலர்கள் எதிராகவும் வாக்களித்தனர். இதனால் உமா மகேஷ்வரி மீண்டும் பதவியை இழந்திருக்கிறார். இரண்டு முறை நடத்தப்பட்ட இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானக் கூட்டம், நகரத்தில் மட்டுமல்லாமல் தி.மு.க. கட்சித் தலைமையிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

99

இதுகுறித்து நகரின் சீனியர் தி.மு.க. புள்ளிகளிடமும் மற்றும் சில கவுன்சிலர்களிடமும் நாம் பேசியபோது, உமா மகேஷ்வரி சேர்மனாகத் தேர்வு செய்யப்பட்ட நாளிலிருந்தே பினாமி பெயரில் டெண்டர் மற்றும் காண்ட்ராக்ட் எடுப்பதும், அதன் மூலம் தன்னை வளர்த்துக்கொள்வதிலேயே அவர் குறியாகச் செயல்பட்டு வந்திருக்கிறார். டெண்டர் எடுத்தாலும் அதன் முழுமையான பணிகளை அவர் செய்வதில்லை. சேர்மன் பொறுப்பிலிருக்கும் அவர் கவுன்சிலர்களின் நலனைப் பற்றியும் கவனத்தில் கொண்டதில்லை. குறிப்பாக, தன் கட்சியின் கவுன்சிலர்களைக் கூட அவர் பொருட்படுத்தியதில்லை. இதனால் ஒட்டுமொத்த வார்டு பணிகளும் ஸ்தம்பிக்கத் தொடங்கின. தங்கள் கண்முன்னாலேயே சேர்மனின் அபார வளர்ச்சியால் ஆதங்கத்திலிருந்த கவுன்சிலர்கள், தாங்கள் அனைத்து வகையிலும் ஒன்றுமில்லாமல் புறக்கணிக்கப்படுவதை வெளிப்படையாகவே தெரிவித்து மனம் புழுங்கியிருக்கிறார்கள். ஆனாலும் சேர்மன் உமா மகேஷ்வரியின் புறக்கணிப்பு தொடர்ந்து நீடித்ததோடு மட்டுமல்லாமல், அது ஒட்டுமொத்த 30 வார்டு கவுன்சிலர்களின் அதிருப்தியையும் எல்லை மீறவைத்திருக்கிறது.

91

இதனால் ஆத்திரமடைந்த அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கவுன்சிலர்கள் 24 பேர் இணைந்து 2022 ஆண்டே சேர்மன் உமா மகேஷ்வரி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர நகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தினர். இந்த விவரம் தி.மு.க.வின் தலைமைக்குத் தெரியவந்ததும், தொகுதியின் பொறுப்பு அமைச்சரான கே.கே.எஸ்.எஸ்.ஆர். மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் நேரு இருவரும் இருதரப்பினரிடமும் விவகாரம் பற்றிப் பேசியிருக்கிறார்கள். அந்தச் சமயம் கவுன்சிலர்களின் ஆதங்கங்களையும் சேர்மனின் செயல்பாடுகளையும் தெளிவாக விசாரிக்காமல், இருதரப்பின் பிரச்சினைகளின் அடிமட்டத்தை ஆராய்ந்து அதற்கான தீர்வைத் தெரிவிக்காமல், பொத்தாம் பொதுவாக இரு தரப்பையும் மேலோட்டமாக சமாதானப்படுத்தி, பேட்ச்-அப் வேலையாகப் பூசி மழுப்பிவிட்டுச் சென்றிருக்கின்றனர். நம்பிக்கையில்லாத் தீர்மானமும் நிறைவேறாமல் போயிருக்கிறது. அப்போதே அமைச்சர்கள் சேர்மன்-கவுன்சிலர்களின் மோதலை தீர்த்திருந்தால், இந்தப் பிரச்சினை இந்த அளவுக்கு விஸ்வரூபம் எடுத்திருக்காது.

அமைச்சர்களின் இந்தச் சமாதானத்தைத் தனக்குச் சாதகமாக எடுத்துக்கொண்ட சேர்மன் உமா மகேஷ்வரி, தன்னுடைய செயல்பாட்டைத் திருத்திக்கொள்ளவில்லை. மக்கள் நலப் பணிகளைத் தொடர்ந்து அலட்சியத்தோடு புறக்கணித்து வந்திருக்கிறார். மேலும், என்னதான் நடந்தாலும் தனது நாற்காலிக்கு அச்சமில்லை என்ற எண்ணத்தில் துணிச்சலாகவே செயல்பட்டிருக்கிறார். அதன் விளைவு, தற்போது கவுன்சிலர்-சேர்மன் விவகாரம் தீர்க்க முடியாத மோதலாகியிருக்கிறது. தொடர்ந்து அனைத்து வார்டு பணிகளின் சுகாதாரப் பணிகளும் புறக்கணிக்கப்பட்டே வந்திருக்கின்றன. இப்படி நகராட்சி கவுன்சிலில், நிர்வாகத்திற்குள்ளேயே இந்த மோதல் வெடிப்பதாலும், மக்கள் பணிகள் ஸ்தம்பித்ததாலும், நகர மக்களின் மனதில் ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையை அது உருவாக்கிவிட்டது. நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தபோதே, தி.மு.க.வின் மண்டலத் தலைவரான கனிமொழி எம்.பி. சேர்மன் உமா மகேஷ்வரியிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், அவர் கேட்டதாகத் தெரியவில்லை. கனிமொழியின் சொல்லையும் மீறி, சேர்மன் உமா மகேஷ்வரி உயர் நீதிமன்றம் சென்றது தி.மு.க. தலைமையை அதிரவைத்திருக்கிறது. காரணம், எத்தனையோ மாநகராட்சி, நகராட்சிகளில் மேயர், சேர்மன், கவுன்சிலர்களிடையே மோதல் நடந்தாலும், அவை பேசித் தீர்க்கப்பட்டுள்ளன; மேயர் அல்லது சேர்மன் மாற்றப்பட்டுள்ளனரே தவிர, இதுவரை யாரும் விவகாரத்தை உயர் நீதிமன்றம் வரை கொண்டு சென்றதில்லை என்பதுதான் அடிப்படை அதிருப்திக்குக் காரணம்.

98

இந்த விவகாரத்தைப் பேசித் தீர்க்க வேண்டும் என்று மாவட்டப் பொறுப்பாளரிடம் கட்சித் தலைமை அறிவுறுத்தியும், நம்பிக்கையில்லாத் தீர்மானம் வரை சென்று தி.மு.க. சேர்மன் பதவி இழந்ததால், தி.மு.க. தலைமை கடுப்பாகியுள்ளது. மேலும், தொகுதியின் தி.மு.க. எம்.எல்.ஏ.வும் வடக்கு மாவட்டச் செயலாளருமான ராஜாவை வரவழைத்து, அடுத்த சேர்மனாக தி.மு.க.வைச் சேர்ந்தவரே வரவேண்டும்; எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் சேர்மனாக வந்துவிட்டால் உங்கள் பொறுப்பிற்கு சிக்கலாகலாம் என்று தலைமை எச்சரித்ததாக நகர நிர்வாகிகளிடையே பேசப்படுவதாகத் தெரிவித்தனர்.

97

இதனால், பரபரப்பான எம்.எல்.ஏ. தரப்பு, அடுத்த வாய்ப்பாக தி.மு.க.வைச் சேர்ந்த ஒரு பெண்ணை சேர்மனாக்கும் தீவிர முயற்சியில் இறங்கியிருக்கிறது. ஏற்கனவே அந்த வாய்ப்பிற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த நபரே இந்த வகையிலான அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொண்டிருக்கிறாராம். மேலும், தி.மு.க. அணியின் கவுன்சிலர்கள் 17 பேரில், சேர்மன் உமா மகேஷ்வரி மற்றும் அவருக்கு ஆதரவாக வாக்களித்த 17-வது வார்டு கவுன்சிலர் விஜயகுமார் ஆகிய இருவரும் அடுத்த சேர்மன் தேர்வில் வாக்களிக்கும்போது கலந்துகொள்ள மாட்டார்கள் என்ற முடிவில் இருக்கிறார்களாம். இதனால் தி.மு.க. அணியின் கவுன்சிலர்கள் எண்ணிக்கை 15-ஆகச் சுருங்க நேரிடும். அதே சமயம், அ.தி.மு.க.வின் எண்ணிக்கையோ 13. சேர்மன் தேர்தல் இம்மாத இறுதிக்குள் நடைபெறும் என்று பேச்சுக்கள் அடிபடுவதால், அ.தி.மு.க.வும் சேர்மன் பதவியைத் தன் வசம் கொண்டுவரும் தீவிரத்தில் இருக்கிறதாம்.

அக்கட்சிக்கு ஆதரவாக இரண்டு கவுன்சிலர்களை வளைத்தாலே போதும் என்ற எண்ணம் அங்கே நிலவுவதை தி.மு.க.வும் கவனிக்கத் தவறவில்லை. எனவே, அடுத்த சேர்மன் தேர்தல் வரை தனது மொத்த கவுன்சிலர்களையும் ஒரு சேரக் கொண்டுசென்று பாதுகாக்கும் பணியை தி.மு.க. தரப்பு இப்போதே செய்யத் தொடங்கியிருப்பதால், நகரின் அரசியல் வட்டாரம் சூடும் பரபரப்புமாக இருக்கிறது.

பதவியிழந்த உமா மகேஷ்வரியோ, நடத்தப்பட்ட ரகசிய வாக்கெடுப்பு முறையாக நடத்தப்படவில்லை என்று மீண்டும் உயர் நீதிமன்றத்தை நாட உள்ளாராம். இதனால், இந்த விவகாரம் இப்போதைக்கு ஓய்வதாகத் தெரியவில்லை.

dmk admk SANGARANKOVIL
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe