Advertisment

சங்கரலிங்கனார் மேம்பாலம்! சந்தோசக் களிப்பில் சிவகாசி!

4

ஒரு ரயில்வே மேம்பாலம் பொது மக்களுக்கு இத்தனை கொண்டாட்ட  மனநிலையைத் தந்துவிடுமா என்பதை மெத்த பூரிப்புடன் நேற்றுதான்  (11-11-2025) உணர்ந்தது சிவகாசி.

Advertisment

சிவகாசி சாட்சியாபுத்தில் உள்ள ரயில்வே கேட்டினை அடைக்கும்போதெல்லாம்,  இருபுறமும் ஒரு கி.மீ.  தூரத்திற்கு வாகனங்கள் நிற்கும். மக்களின் பரபரப்பான அன்றாட பணிகளுக்கு  பெரும் இடையூறாகவும்  தடையாகவும் இருந்து மன உளைச்சலை  தந்துகொண்டிருந்த அந்த ரயில்வே கேட், மேம்பாலத் திறப்பின்  காரணமாக நிரந்தரமாக இல்லாது போனதால், கிட்டத்தட்ட விடுதலை  உணர்வினை அடைந்திருக்கிறார்கள் சிவகாசிவாசிகள். கடந்த 30  வருடங்களாக பாலம் வருமா? வராதா? என்று பட்டிமன்றத் தலைப்பினைப் போல் கிளம்பியபடியே இருந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது அரசுகள்.

Advertisment

4

சிவகாசியில் ரூ.62 கோடியில் உருவாகியிருக்கும் புதிய ரயில்வே  மேம்பாலத்தை காணொலி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் திறந்துவைத்து, தியாகி சங்கரலிங்கனார் மேம்பாலம்  எனப் பெயர் சூட்டியிருக்கிறார்.  விருதுநகர் மாவட்ட ஆட்சியர்  சுகபுத்ரா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, காங்கிரஸ்  எம்.பி. மாணிக்கம் தாகூர், சிவகாசி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசோகன்,  சிவகாசி (திமுக) மேயர் சங்கீதா இன்பம் ஆகியோர்  கலந்துகொண்டனர்.  

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியபோது “தமிழ்நாடு  முதலமைச்சர் தலைமையிலான ஆட்சியின் ஒவ்வொரு நாளையும்,  மக்களுக்கான புதிய திட்டங்களும், மக்களுக்கான நலன்களும்  விளைவிக்கக்கூடிய நாள் என்றே கூறலாம். போக்குவரத்து  இடையூறினால் பாதிக்கப்பட்ட சிவகாசி மற்றும் திருத்தங்கல்  மக்களுக்கு  சிறந்த முறையில் எதிர்காலத்தை உருவாக்கும் பொருட்டு சாட்சியாபுரம்  மேம்பாலமும், திருத்தங்கல் மேம்பாலமும் அமைத்துத் தர அறிவிப்பு    வெளியிடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, இந்த சாட்சியாபுரம்  மேம்பாலத்தினை சுமார் ரூ.61 கோடி மதிப்பீட்டில் கட்ட நிர்வாக அனுமதி  அளிக்கப்பட்டு ,  850 மீட்டர் நீளத்துடன் கட்டப்பட்டது. இதற்கான பணிகள்  கடந்த 2024 ஆம் ஆண்டு ஜுலை– 26-ல் தொடங்கப்பட்டு, 18 மாத காலம்  இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில்,  மூன்று மாதத்திற்கு முன்னரே  பணிகள் முடிவடைந்துள்ளன. மேலும், 18 மாதத்தில் முடிவடைய  வேண்டிய பணியானது முன்னரே முடிவடைந்த காரணத்தினால்,  தமிழகத்தில் உள்ள மற்ற பாலப்பணிகளுக்கு இதுவே ஒரு  முன்னுதாரணம். அரசாங்கத்துடன் இணைந்து நெடுஞ்சாலைத்துறை,  அதனுடன் தொடர்புடைய மின்சார வாரியம், மக்கள் பிரதிகள் மற்றும்  ஒப்பந்ததாரர் என அனைவரும் ஒருங்கிணைந்து ஒரே திசையில்  செயலாற்றிய காரணத்தினால்,  இப்பணிகள் குறித்த காலத்திற்கு முன்னரே  முடிக்கப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

Untitled-1

நமக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி யாதெனில்,  தமிழ்நாடு முதலமைச்சர்  கூறியது போல இப்பாலத்தினை திறந்து வைத்ததுதான்.  நம்முடைய  ஆட்சிக்காலத்தில் மற்றுமொரு பெருமை திருத்தங்கல் பாலமாகும்.  திருத்தங்கல் பாலம் அமைக்க நமது அரசாங்கம் அனுமதி வழங்கி, பணி  நடைபெற ஏறத்தாழ ரூ.74 கோடி நிதி ஒதுக்கி, இதில் பாலப்பணிகளுக்கு  மட்டும் ரூ.45 கோடி நிதியினை வழங்கியுள்ளார் நம்முடைய தமிழ்நாடு  முதலமைச்சர்.  சிவகாசி மாநகராட்சிக்கு நம்முடைய ஆட்சிக்காலத்தில்  பல்வேறு  திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு முதலமைச்சரின் நோக்கம். திருத்தங்கல் பாலத்தினையும்  விரைந்து துரித  முறையில் முடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அது  மட்டுமல்லாமல், சிவகாசி – விருதுநகர் செல்லக் கூடிய சாலையினை  நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு  வருகின்றன. மேலும், மாநாட்டு அரங்கம் ஒன்று சிவகாசி மாநகராட்சிக்கு  வழங்கப்பட்டுள்ளது.  ஆகவே, சிவகாசி மாநகராட்சியை உயர்த்த வேண்டும்  என்ற எண்ணத்துடன் செயலாற்றி வருவது நம்முடைய தமிழ்நாடு  முதலமைச்சரின் அரசு.” என்றார்.

சிவகாசி மட்டுமல்ல, 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் என,   சுமார் 5  லட்சம் பேர் பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது, தியாகி  சங்கரலிங்கனார் மேம்பாலம். 

FLYOVER BRIDGE Sivakasi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe