மகாராஷ்டிரா அமைச்சர் ஒருவர், தனது வீட்டில் பை நிறைய பணத்துடன் இருப்பது போன்ற புகைப்படத்தை சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) எம்.பி சஞ்சய் ராவத் வெளியிட்டு அம்மாநில அரசியலில் பெரும் விவாதத்தை தூண்டியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க - சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில துணை முதல்வர்களாக சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டேவும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவாரும் பொறுப்பு வகித்து வருகின்றனர். தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அமைச்சரவையில், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சியைச் சேர்ந்த சஞ்சய் ஷிர்சாத், அம்மாநிலத்தில் சமூக நீதி அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்த நிலையில், சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) எம்.பி சஞ்சய் ராவத், அமைச்சர் சஞ்சய் ஷிர்சாத் தனது வீட்டில் பணப்பையுடன் இருப்பது போன்ற ஒரு வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், சமூக நீதி அமைச்சர் சஞ்சய் ஷிர்சாத் தனது படுக்கைறையில் அமர்ந்து சிகரெட் புகைத்துக் கொண்டிருப்பதும், அவருக்கு அருகில் உள்ள ஒரு பையில் பணம் இருப்பதும், அருகில் மற்றொரு சூட்கேஸ் இருப்பதும், ஒரு செல்ல நாயும் இருப்பதும் காண முடிகிறது. அந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட சஞ்சய் ராவத், ‘இந்த அதிர்ச்சியூட்டும் வீடியோவை, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பார்க்க வேண்டும். இந்த வீடியோவில், மகாராஷ்டிரா அமைச்சர் நிறைய சொல்கிறார். முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மீது எனக்கு பரிதாபமாக இருக்கிறது. இன்னும் எத்தனை முறை அவர் தனது நற்பெயர் கிழிக்கப்படுவதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பார்? உதவியற்ற தன்மைக்கு இன்னொரு பெயரும் உண்டு, அது தான் ஃபட்னாவிஸ்’ என்று பதிவிட்டிருந்தார்.
இந்த வீடியோ வைரலாகி மகாராஷ்டிரா அரசியலில் பேசுப்பொருளாக மாறியுள்ளது. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, இது குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என சஞ்சய் ஷிர்சாத்துக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்த சஞ்சய் ஷிர்சாத், “சிலர் புகார் அளித்தனர், வருமான வரித்துறை அதைக் கவனத்தில் கொண்டது. நோட்டீஸுக்கு பதிலளிக்க நாங்கள் நேரம் கேட்டுள்ளோம், மேலும் எங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவோம். சிலருக்கு என்னுடன் பிரச்சனை இருந்தது. ஆனால் நான் அவர்களுக்கு பதிலளிப்பேன். அமைப்பு அதன் வேலையைச் செய்கிறது, எனக்கு அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. எனக்கு எந்த அழுத்தமும் இல்லை” என்று கூறினார்.
ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா எம்.எல்.ஏ சஞ்சய் கெய்க்வாட் தரமற்ற உணவிற்காக ஒரு கேண்டீன் ஊழியரைத் தாக்கிய சம்பவம் அம்மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரம் குறித்து சஞ்சய் கெய்க்வாட் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றொரு சிவசேனா தலைவர் சிக்கலில் சிக்கியுள்ளார்.