பெருநகர சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6வது மண்டலங்களில் மேற்கொள்ள வேண்டிய தூய்மைப் பணிகளை 276 கோடி ரூபாய்க்கு தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கி கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி (16.06.2025) மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் பில்டிங் அருகில் தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் கடந்த 12 நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களுக்கு சென்னை மாநகராட்சி தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதில், “போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தற்காலிக தூய்மை பணியாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். தூய்மை பணிகளை தனியாருக்கு மாற்றினாலும் தற்காலிக தூய்மை பணியாளர்கள் பணியில் இருந்து நீக்கப்பட மாட்டார்கள். இதுவரை கிடைக்காத பணி பாதுகாப்பு, சலுகைகள், புதிய விதிமுறையின் கீழ் கிடைக்கும். எனவே பணி பாதுகாப்பு, பணப் பலன்களை சென்னை மாநகராட்சி 100 சதவீதம் உறுதிசெய்யும். தற்காலிக தூய்மைப் பணியாளர்கள், தனியார் நிறுவனத்தில் தொழிலாளர் சட்ட விதிமுறைகளுக்குட்பட்டு பணியாளர்களாக ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எந்த ஒரு தற்காலிக பணியாளரும் நீக்கப்படவில்லை. எனவே பொதுநலன் கருதி, பணி பாதுகாப்பு குறித்த உண்மை நிலையை அறிந்து தூய்மை பணியாளார்கள் பணிக்கு திரும்ப வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொருபுறம் தனியாரிடம் சாலைப் பராமரிப்பை ஒப்படைத்தால் சுமார் 4 ஆயிரம் பணியிடங்களை இழக்க நேரிடும் என கூறி சாலைப் பணியாளர்கள் சென்னை எழிலகத்தில் இன்று (12.08.2025) உண்ணாவிரதம் இருக்க முயன்றனர்.
இதனையொட்டி சென்னைக்குப் போராட வந்த சாலைப் பணியாளர்கள் 150 பேர் சென்னை வரும் வழியில் 350 பேர் என மொத்தம் 500 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக சாலை பணியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் தனியார் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்டவர், “சாலை பராமரிப்புப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டாம்” என முழக்கமிட்டனர்.