மதுரை மாநகராட்சி 100 வார்டுகளை உள்ளடக்கியது ஆகும். இதில் 5 மண்டலங்கள் உள்ளன. இங்குக் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய தூய்மைப் பணியாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று (18.08.2025) காலையில் இருந்து மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதே சமயம் தொடர்ந்து மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் தொடர்ந்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இத்தகைய சூழலில் தான் அங்கு வந்த போலீசார் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர் கைது செய்து வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர்.
இந்த கைது சம்பவத்திற்கு மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மதுரை மாநகராட்சி வளாகத்தில் ஜனநாயக வழியில் போராடிய தூய்மை பணியாளர்கள் காவல்துறையினரால் அராஜகமாகக் கைது செய்யப்பட்டதற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலம் முழுக்க தூய்மை பணியாளர்களின் போராட்டத்தைக் காவல் துறைதான் கையாளுமென்றால் நகராட்சி துறையும், தொழிலாளர் நலத்துறையும் எதற்கு?. மதுரையில் தூய்மைப் பணிகளைத் தனியாருக்குக் கொடுத்த பின்னர் அந்த நிறுவனம் செய்துள்ள சட்ட மீறல், சம்பளக் குறைப்பு, ஒப்பந்த விதி மீறல், தொழிலாளிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி ஆகியவை எண்ணற்றவை.
ஆனால் அவைகள் மீது எந்த விதமான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. ஆனால் தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடும் தொழிலாளிகள் மீது இரவோடு இரவாகக் கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக மட்டுமல்லாமல் தொழிலாளர்களுக்கு எதிராக காவல்துறை தொடர்ந்து களம் இறக்கப்படுவது அரசுக்கு அவப்பெயரைத்தான் உருவாக்கும்” எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தூய்மை பணியாளர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும் 2வது நாளாக இன்றும் (19.08.2025) தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் தந்தை பெரியார் சிலை அருகே உள்ள சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.