பெருநகர சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6-ஆவது மண்டலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய தூய்மைப் பணிகளை 276 கோடி ரூபாய்க்குத் தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கி, கடந்த ஜூன் மாதம் மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து, பணி நிரந்தரம் செய்யக் கோரி, சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் கட்டடம் அருகில் தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் 13 நாட்களாகத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், நீதிமன்ற உத்தரவின் பேரில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் 13-ஆம் தேதி இரவு குண்டுக்கட்டாகத் தூக்கி கைது செய்தனர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பேசுபொருளாக மாறியது.
இந்த நிலையில், தூய்மைப் பணியாளர்களை நிரந்தரம் செய்து, அவர்களைக் காலம் முழுவதும் குப்பையை அள்ள வைக்கக் கூடாது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகப் பிறந்தநாள் விழாவில் பேசிய திருமாவளவன் எம்.பி, “தூய்மைப் பணியாளர் பிரச்சினையில் திருமாவளவன் ஏன் அரசை எதிர்த்துப் போராடவில்லை என்று நம்மை விமர்சிக்கிறார்கள். ஆனால், போராட்டம் ஆரம்பித்த மூன்றாவது நாளே சிந்தனைச் செல்வன் அங்கு சென்றார். 5-ஆவது நாள் நள்ளிரவில் போராட்டக் களத்திற்குச் சென்று ஒரு மணி நேரம் அவர்களுடன் இருந்து பேசிவிட்டு வந்தேன். 6-ஆவது நாள் முதல்வரைச் சந்தித்து இந்தப் பிரச்சினை குறித்து எடுத்துப் பேசினேன். 13-ஆம் தேதி வரை அமைச்சர்கள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேசினேன்.
இந்த விவகாரத்தில், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை ஆதரிக்கும் நேரத்தில், ஒன்றை மட்டும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். நம்முடைய கோணத்தில் இருந்து இந்தப் பிரச்சினையை அணுக வேண்டும். குப்பை அள்ளும் தொழிலைச் செய்துவருபவர்களைப் பணி நிரந்தரம் செய்து, காலம் முழுவதும் நீங்கள் அதையே செய்துகொண்டிருங்கள் என்று கூறுவது ஏற்புடையதல்ல. அதிலிருந்து மீள வேண்டும் என்பதுதான் நம்முடைய போராட்டம். மலம் அள்ளுபவர்களே மலம் அள்ளட்டும், குப்பை அள்ளுபவர்களே குப்பை அள்ளட்டும் என்ற கருத்துக்கு இது வலு சேர்க்கிறது. ஆகையால், குப்பை அள்ளுபவர்களை நிரந்தரமாகப் பணியமர்த்த வேண்டும் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து உள்ளது.
காலங்காலமாக இருக்கும் மரபுசார்ந்த சிந்தனை இது. அடிமை சார்ந்த சிந்தனை இது. உலக நாடுகள் எல்லாம், அறிவியல் வளர்ச்சியின் காரணமாக, கருவிகள் மூலம் குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் இந்த வேலையைச் செய்ய வேண்டும் என்ற நிலையை மாற்றி, தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள் யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளன.
ஆகவே, பணி நிரந்தரம் செய்யக் கூடாது என்பதுதான் சரியான கருத்து. ஒருவேளை அவர்களை அரசு ஊழியர்களாக ஆக்கினால், அவர்களுக்குப் பிறகு அந்தப் பணியைச் செய்ய யார் வருவார்கள்? யார் தயாராக இருக்கிறார்கள்? இந்தத் தலைமுறை அந்தத் தொழிலைச் செய்துவிட்டுப் போகட்டும், ஆனால், அடுத்த தலைமுறை அந்தத் தொழிலுக்குள் போகக் கூடாது என்பதுதானே சமூக நீதி. அதிலிருந்து அவர்களை மீட்பதுதானே சமூக நீதி” என்று தெரிவித்துள்ளார்.