சென்னை மாநகராட்சி கீழ் செயல்படும் தூய்மை பணியாளர்களை தனியார் மயப்படுத்தும் தீர்மானத்தை கைவிட கோரியும்,10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யப்படும் என திமுக அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நடைமுறைப்படுத்த கோரியும் தூய்மைப் பணியாளர்கள் கடந்த 7 நாட்களாக சென்னை மாநகராட்சியின் நுழைவாயில் அருகில் கூடாரம் அமைத்து தூய்மைப் பணியாளர்கள் போராடி வருகின்றனர். 

'தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தூய்மை பணியாளர்களுக்கு 10 வருடத்திற்கு மேலாக பணிபுரிந்தவர்களுக்கு நிரந்தப்பணி வழங்கப்படும் என அறிவித்திருந்தது. ஆனால் தி.மு.க. ஆட்சியில் அமர்ந்து 5 ஆண்டுகள் முடியும் தருவாயிலும் பணி நிரந்தரம் செய்யவில்லை, மேலும் மாறாக மீண்டும் அதிமுக போன்றே செய்துவருகிறார்கள்' என்ற குற்றச்சாட்டை வைத்து இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து  போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் போராட்டத்தைத் தொடர்வது பொது அமைதிக்கும், பாதுகாப்புக்கும் இடையூறு ஏற்படுத்தும் என்பதால் உடனடியாக கலைந்து செல்ல வேண்டும் என போராட்டக்காரர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. உத்தரவை மீறி போராட்டம் தொடர்ந்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.