பெருநகர சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6வது மண்டலங்களில் மேற்கொள்ள வேண்டிய தூய்மைப் பணிகளை 276 கோடி ரூபாய்க்குத் தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கி கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி (16.06.2025) மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் பில்டிங் அருகில் தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் 13 நாட்களாகத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையே இந்த போராட்டம் தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையில் அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்துவதால் தூய்மைப் பணியாளர்களை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்துமாறு  நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisment

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களைக் கைது செய்யும் முனைப்பில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இதற்காக ரிப்பன் மாளிகை வளாகம் நேற்று முன்தினம் (13.08.2025) மாலை முதலே போலீசாரின் முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பிறகும் போராட்டத்தைத் தொடர்ந்து தூய்மைப் பணியாளர்கள் நடத்தி வந்த நிலையில் போலீசார் குண்டுகட்டாக தூய்மைப் பணியாளர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் விசிக நிறுவனத் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் மதுரையில் இன்று (15.08.2025) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர் ஒருவர், “தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக திமுக கூட்டணியை விட்டு திருமாவளவன் வெளியே வருவாரா என்று கேட்கிறார்கள்” எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு திருமாவளவன் பதிலளித்துப் பேசுகையில், “இதை வைத்து அரசியல் செய்வது ரொம்ப அற்பமான ஒரு அணுகுமுறை. அதாவது தூய்மை பணியாளர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை விட இந்த பிரச்சினையைப் பயன்படுத்தி திமுக கூட்டணியை உடைக்க வேண்டும் அதுதான் நோக்கமாக இருக்கிறது. அப்படியென்றால் இதையும் அவர்கள் அரசியல் ஆதாயத்திற்குப் பயன்படுத்த முயற்சிக்கிறார்கள். தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் என்பதுதான் முதன்மையானதாக இருக்க வேண்டும். 

தூய்மை பணியாளர்களில் பெரும்பான்மையானவர்கள் தலித்துகளாக இருக்கிறார்கள். அதனால் தலித்துகள் தான் இந்த பிரச்சனையைப் பேச வேண்டும். திருமாவளவன் தான் பேச வேண்டும் என்ற ஒரு பார்வையும் ஏற்புடையதல்ல. இது எல்லோருக்குமான பிரச்சனை. ஏன் இது குறித்து அதிமுக எடுத்துப் போராடக்கூடாது. போராட்டம் நடைபெற்ற 13 நாட்கள் அதிமுக சார்பில் என்ன செய்தார்கள்?. போராட்டத்தின் கடைசி நாள் போலீஸ் தூய்மை பணியாளர்கள் மீது கை வைக்கும் போது தானே எடப்பாடி பழனிச்சாமி வாய் திறக்கிறார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி 13 நாட்கள் தொடர்ந்து அதிமுக போராட்டத்தில் தலையிட்டு இருக்க வேண்டியது தானே?. ஏன் தலையிடவில்லை? அதிமுக ஆட்சியில் தான் தனியார்மயமாக்கப்பட்டது. அதுக்கு என்ன அவர்கள் பதில் சொல்கிறார்கள். 15 மண்டலங்களில் 11 மண்டலங்களை அதிமுக தனியார் மயமாக்கினார்கள் அதற்கு அதிமுகவின் பதில் என்ன?. அரசாணை அரசாணை 152 போட்டதே அதிமுக தான்” எனத் தெரிவித்தார்.