'மணல் கொள்ளையே மகத்தான திராவிட மாடல் அரசின் பரிசு'-அன்புமணி விமர்சனம்

A24

'Sand theft is the great gift of the Dravidian model government' - Anbumani's criticism Photograph: (pmk)

'மணல் கொள்ளையை மட்டுமே மகத்தான கொள்கையாகக் கொண்ட திராவிட மாடல் அரசின் பரிசு' என பாமக அன்புமணி  விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில்  பெய்து வரும்  தொடர்மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்ததைத் தொடர்ந்து அணையிலிருந்து காவிரியில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு இன்று காலை  முதல் வினாடிக்கு  1.26 லட்சம் கன அடிக்கும் கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  நீர்வரத்து  அதிகரித்து வருவதால், நிரம்பிய அணையில் இருந்து நீர்திறப்பும் அதிகரிக்கும் என்று  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேட்டூர் அணையிலிருந்து கடந்த சில நாள்களாகவே அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் குறுவைப் பயிர்களுக்கு போதிய அளவு தண்ணீர் கிடைத்துள்ளது. நீர் நிலைகளும் நிரம்பியிருப்பதால் பாசனத்திற்கான தண்ணீரின் தேவை குறைந்து விட்ட நிலையில், அணையில் இருந்து  தினமும் திறந்து விடப்படும் 10.5 டி.எம்.சி  ( இது மேலும்  அதிகரிக்க வாய்ப்புள்ளது)  நீரில் சுமார் 10 டி.எம்.சி நீர் யாருக்கும் பயன்படாமல் வீணாக கடலில் கலக்கும் நிலை உருவாகியுள்ளது.

காவிரி, கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் வாய்ப்பும், நில அமைப்பும் சரியாக உள்ள இடங்களில் தடுப்பணைகளை கட்டுவதன் வாயிலாகவும்,  காவிரியில் வரும் உபரிநீரை சேமிக்கும் வகையில் ஏரிகள் மற்றும் குளங்களுக்கு இடையே இணைப்பை ஏற்படுத்துவதன் வாயிலாகவும்  ஒரே நேரத்தில் 25 முதல் 30 டி.எம்.சி வரை தண்ணீரை சேமித்து வைக்க முடியும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், பாசனக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் அக்கறை இல்லாத தமிழக அரசு அதற்கான நடவடிக்கைகளை  மேற்கொள்ள மறுக்கிறது.

அதே நேரத்தில் எங்கெல்லாம் தடுப்பணைகளை கட்ட வேண்டுமோ அங்கெல்லாம்  மணல் குவாரிகளை அமைத்து  மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது. இதனால், அந்தப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைதல், கடலை ஒட்டிய பகுதிகளில் கடல் நீர் உள்புகுந்து  நிலத்தடி நீரை பாழ்படுத்துதல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. காவிரி நீர் வீணாக கடலில் கலப்பதும்,  மணல் குவாரிகளால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதும்  மணல் கொள்ளையை மட்டுமே மகத்தான கொள்கையாகக் கொண்ட திராவிட மாடல் அரசின் பரிசு ஆகும்.

திராவிட மாடல் அரசு இனியாவது திருந்த வேண்டும். மணல் கொள்ளைக்கு முக்கியத்துவம் தருவதை விடுத்து வாய்ப்புள்ள இடங்களில் தடுப்பணைகளைக் கட்டுதல், நீர்நிலைகளை இணைத்து கொள்ளளவை அதிகரித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் காவிரி வீணாக கடலில் கலப்பதை  ஓரளவாவது தடுக்க  தமிழக அரசு முன்வர வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

dmk DMK MK STALIN pmk
இதையும் படியுங்கள்
Subscribe