புதுக்கோட்டை மாவட்டத்தில் மண், மணல், கிராவல் போன்ற கனிமவளங்கள் தொடர்ந்து கொள்ளை போய்க் கொண்டிருக்கிறது. அனுமதி பெறாத கிராவல் குவாரிகளில் இருந்து நிமிடத்திற்கு ஒரு டாரஸ் வீதம் இரவு பகலாக கிராவல் மண் அள்ளப்பட்டு வருவாய் துறை அலுவலகங்கள் வழியாகவே செல்கிறது. இதே போல அக்னி ஆறு, வெள்ளாறுகளில் தொடர்ந்து மணல் திருட்டுகள் நடந்து கொண்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று (23.09.2025) நள்ளிரவில் கறம்பக்குடி தாலுகா மழையூர் காவல் சரகம் மேலவாண்டான்விடுதி பகுதியில் உள்ள அக்னி ஆற்றில் மணல் திருடப்படுவதாக மழையூர் போலிசாருக்கு தகவல் வந்தது. இந்நிலையில் போலிசார் அங்கு சென்று பார்த்தனர். அப்போது ஆற்றில் இருந்து ஒரு டாரஸ் டிப்பர் லாரி மணல் ஏற்றி கொண்டு வெளியே வந்தது. அப்போது போலிசார் அந்த லாரியை நிறுத்தினர்.
இதனையடுத்து லாரி ஓட்டுநரான நெய்வேலி தென்பாதி கிராமத்தைச் சேர்ந்த ரராமசாமி மகன் வெங்கடேசன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மணல் லாரியை பிடித்த மழையூர் போலிசார் காவல் நிலையம் ஓட்டிச் சென்று வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.