Sand theft clash; Brother by brother - 7 people present Photograph: (pudukottai)
புதுக்கோட்டையில் அண்ணன் தம்பி என இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 7 பேர் சரணடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் காமராஜர் நகர் தெருவைச் சேர்ந்த காத்தமுத்து மகன்கள் கண்ணன் (32),கார்த்திக்(27). சரக்கு வாகனம் வைத்து வெள்ளாற்றில் மணல் அள்ளி வியாபாரம் செய்து வந்தனர். இதே பகுதியைச் சேர்ந்த கூழ் காளிதாஸ் உள்பட பலருக்கும் மணல் திருட்டே தொழில். இதனால் கூழ் காளிதாசோடு கண்ணன் சகோதரர்களுக்கும் மோதல் உருவானது. பக்கத்து வீட்டுக்காரர்கள் என்றாலும் மணல் அள்ளுவது, மணல் அள்ளுவோரிடம் மாமூல் வசூலிப்பது, லாட்டரி வியாபாரம் என எல்லா தொழிலிலும் மோதல் உருவாகி பகைமை அதிகமானது.
இதோடு, கண்ணன் பைக்குகள் வாங்கி விற்பனை செய்வதில் கூழ் காளிதாஸ் நண்பன் கல்லல் அருவா குமார் என்கிற கருப்பூர் முத்துக்குமாருடன் மோதல் முற்ற கடந்த வாரம் ரூ.40 ஆயிரத்திற்கான பஞ்சாயத்து நடந்தபோது கண்ணனும் முத்துக்குமாரும் பேச்சிலேயே "அரிவாள்" ஆயுதம் என்ற வார்த்தைகளே முன்னால் வந்துள்ளது.
இந்நிலையில் வியாழக்கிழமை இரவு குளக்கரையில் நண்பர்களுடன் மதுஅருந்திக் கொண்டிருந்த கண்ணன். அதேநேரத்தில் வீட்டில் இருந்த அவரது தம்பி கார்த்திக்கை பஞ்சாயத்து பேச வேண்டும் என்று குளக்கரைக்கு அழைத்து வந்து இருவரும் கூலிப்படையால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் உறவினர்களும், மாவட்ட எஸ்பி அபிஷேக் குப்தா உள்ளிட்ட போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது கை, விரல்கள் துண்டாகி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்து தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடும் பணியை தீவிரப்படுத்தி இருந்தனர். உறவினர்கள் அதிகம் கூடிவிட பரபரப்பு ஏற்பட்டதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
நள்ளிரவு நேரத்தில் கூழ் காளிதாஸ், அரிவாள் குமார் (எ) முத்துக்குமார் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த யஷ்வந்த், முனீஸ்வரன், சதீஷ்குமார், சத்தியசேகர், ஐயப்பன் என 7 பேர் நாகுடி காவல் நிலையத்திற்குச் சென்று சரண்டர் ஆனார்கள். சரண்டர் ஆனவர்களை தனி இடத்தில் வைத்து போலீசார் செய்த முதல் கட்ட விசாரணையில், எங்கள் தொழிலுக்கு இடையூறாக இருந்த கண்ணன் கடந்த வாரம் நடந்த பைக் விற்றது சம்மந்தமான பண பஞ்சாயத்தில் என்னை கொன்றுவிடுவதாக மிரட்டினான். அதனால் அவனை முடித்துவிட முடிவெடுத்து நாங்கள் (கூழ் காளிதாஸ், அருவா குமார்) ஒன்று சேர்ந்து கூலிப்படையை அமைத்து சில நாட்களாக கண்காணித்து வழக்கமாக கண்ணன் மது குடிக்கும் இடத்தை தேர்வு செய்தோம். வியாழக்கிழமை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி அறந்தாங்கி வருவதால் கண்ணன் கூட இருப்பவர்கள் அறந்தாங்கி சென்றுவிடுவார்கள். கண்ணன் மட்டும் தனியாக இருப்பான் என்பதால் இந்த நாளை திட்டமிட்டோம்.
எங்கள் திட்டம் போல வழக்கமான குளக்கரையில் கண்ணன் அவனது ஒரு நண்பனுடன் மது குடித்துக்கொண்டிருந்த போது அவனை கொலை செய்ய திட்டமிட்டோம். ஆனால் அவன் தம்பி கார்த்திக் பிழைத்திருந்தால் மேலும் நமக்கு பிரச்சனை என்பதால் சற்று தூரத்தில் நின்ற கார்த்திக்கை அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரை அனுப்பி உங்க அண்ணன் - முத்துக்குமார் மோதலை முடிவுக்கு கொண்டு வர பஞ்சாயத்து பேச வந்திருக்காங்க நீயும் வா என்று அழைத்து வரச் செய்தோம். அதை நம்பி கார்த்திக்கும் வந்தான்.
கார்த்திக் வந்ததுமே ஒரே நேரத்தில் அண்ணன் தம்பி இருவரையும் சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு அவர்கள் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தியதும் வெளியேறிட்டோம். கண்ணனுடன் மது குடித்துக் கொண்டிருந்த நபர் எங்களை நன்றாக பார்த்து விட்டார். அதன் பிறகு தான் நாகுடியில் ஆஜரானோம் என்று கூறியுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.