மத பண்டிகையை முன்னிட்டு இரண்டு நாட்களுக்கு இறைச்சி மற்றும் பிற அசைவப் பொருட்களை விற்பனை செய்வதற்கு தடை விதிப்பதாக ராஜஸ்தான் மாநில அரசு அறிவித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் பஜன் லால் ஷர்மா தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில், வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி பர்யுஷன் பண்டிகையும், செப்டம்பர் 6ஆம் தேதி அனந்த சதுர்தசி பண்டிகையும் கொண்டாப்பட இருக்கிறது. இந்த இரண்டு பண்டிகையையொட்டி, ஆகஸ்ட் 28 மற்றும் செப்டம்பர் 6 ஆகிய தேதிகளில் மாநிலத்தில் இறைச்சி கூடங்கள் மற்றும் ஆட்டிறைச்சி - கோழி கடைகள் மூடப்படவுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. முன்னதாக இந்த இரண்டு நாட்களில் மாநிலம் முழுவதும் முட்டை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. மத அமைப்புகளின் கோரிக்கைகள் காரணமாக இந்த இரண்டு நாட்களில் முட்டை மற்றும் இறைச்சி விற்பனைக்கு தடை செய்ய முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
பர்யுஷன் பண்டிகை என்பது சமண மதத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு புனித நிகழ்வாகும். இந்த தினத்தையொட்டி உண்ணாவிரதம், பிரார்த்தனை, தியானம் போன்றவற்றை சமன மதத்தினர் செய்வார்கள். அதே போல், அனந்த சதுர்தசி பண்டிகை என்பது 10 நாள் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களில் கடைசி நாள் பண்டிகையாகும். விநாயகர் சதுர்த்தி பண்டிகையை விநாயகர் பிறந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. விநாயக சதுர்த்தி பண்டிகை 10 நாட்கள் கொண்டாடப்பட்டு கடைசி நாளான அனந்த சதுர்தசி பண்டிகையின் போது விநாயகர் உருவத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் பக்தர்கள் கரைப்பார்கள்.
மகாராஷ்டிராவில் உள்ள பல நகராட்சிகளில் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 மற்றும் மத பண்டிகையான ஆகஸ்ட் 20 ஆகிய தேதிகளில் இறைச்சி விற்பனைக்கு தடை செய்யப்பட்டிருந்தது. இந்த விவகாரம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. எதிர்க்கட்சியான சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. மகாராஷ்டிரா துணை முதல்வரான அஜித் பவாரும், இந்த உத்தரவை கடுமையாக எதிர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.