பள்ளிகளில் இருந்து விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கல்வி நிகழ்வுகளில் பங்கேற்கச் செல்லும் மாணவிகளின் பாதுகாப்புக்காக பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பள்ளிக்கல்வி துறை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'பள்ளி விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்கும் பெண்கள், சிறுமிகள் பாதுகாப்பான சூழலில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்; ஒவ்வொரு விளையாட்டு அமைப்பிலும் ஒரு பாதுகாப்பு அலுவலர் நியமிக்கப்பட வேண்டும்; தனிப்பட்ட மற்றும் ரகசியமாக புகார்கள் பெற்று நடவடிக்கை எடுக்கும் அமைப்பை உருவாக்க வேண்டும்; மாணவிகளும் மற்றும் வீராங்கனைகள் அல்லது பெற்றோர் எளிதாக புகார் செய்யக்கூடிய வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

இது தொடர்பாக எந்த புகார் வந்தாலும் தாமதமின்றி விசாரணை நடத்தி சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுப்பது அவசியம்; பயிற்சி மற்றும் போட்டி இடங்களில் தனித்தனியாக உடை மாற்றும் அறைகள் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்; அழைத்து செல்லப்படும் மாணவிகள் தங்க வைக்கப்பட்டுள்ள இடங்களில் சிசிடிவி கேமராக்கள் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்; பயிற்சி மேற்கொள்ளும் பொழுது மாணவிகளை வீடியோ எடுக்கக் கூடாது என பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறையால் வெளியிட்டுள்ளது.