கேரளாவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க, பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்குப் பிற மாநிலங்களிலிருந்து மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் ஆண்டுதோறும் வருகை தருவது  வழக்கம். குறிப்பாக கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் இக்கோயிலுக்குத் திரளான பக்தர்கள் வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இக்கோயிலில் சமீபகாலங்களில் அரங்கேறி வரும் குற்றச் சம்பவங்கள் பக்தர்களை மட்டுமல்லாது பொதுமக்களையும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கின்றன. 

Advertisment

சில நாட்களுக்கு முன்பு கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படும் நெய்யில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இதன் பொருட்டு பல லட்ச ரூபாய்கள் கையாடல் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. முன்னதாக, கோயில் நிர்வாகத்திற்குச் சொந்தமான தங்கம் திருடப்பட்டதாகத்  தகவல் வெளியானது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், இது குறித்து வழக்குப் பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த தங்கத்திருட்டு சம்பவம் குறித்து முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டி, காங்கிரஸ் இளைஞர் அணி சார்பில் கேரளா அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டது. 

Advertisment

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், கேரளா சட்டமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைக்க, கூட்டத்தினர் மீது காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி அவர்களைக் கலைக்க முயன்றனர். மேலும், அவர்கள் மீது தண்ணீரைப் பீய்ச்சியடித்துக் கூட்டத்தைக் கலைக்கும் முயற்சியில் காவல்துறை ஈடுபட்டது.  

இது ஒருபுறம் இருக்க, கேரளாவில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், தேவசம்போர்டு அமைச்சர் வி.என்.வாசவன் பதவி விலக வேண்டுமென, எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். மேலும், இந்த வழக்கை விசாரணை செய்யும் சிறப்புப் புலனாய்வுக் குழுவிற்கு எதிராகக் கேரளா அரசு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவருகின்றன. இந்த சம்பவங்கள் கேரளா அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment