பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையாவால் கடந்த 1998ஆம் ஆண்டு கேரளா தேவஸ்தானம் போர்டுக்கு 30 கிலோ தங்கம் நன்கொடையாக வழங்கப்பட்டது, அதன் அடிப்படையில் அந்த தங்கமானது தங்கக் கவசமாக மாற்றப்பட்டது. இதனையடுத்து தங்கக் கவசத்தைச் செப்பனிட்டுக் கொடுப்பதாகக் கூறி பெங்களூருவைச் சேர்ந்த உன்னி கிருஷ்ணன் போத்தி என்பவரிடம் தேவஸ்தானம் சார்பில் நகைகள் கொடுக்கப்பட்டது. அதன்படி தங்கக் கவசம் செப்பனிடப்பட்டு, அதனைத் தேவஸ்தானம் போர்டு திரும்பப் பெற்றுக் கொண்டது. 

Advertisment

இத்தகைய சூழலில் தான் கேரளா உயர் நீதிமன்றத்தில் சபரிமலை கோவில் சிறப்பு ஆணையர் உயர் நீதிமன்ற அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், ‘என்னிடம் எவ்வித அனுமதியும் பெறாமல் தங்கக் கவசம் செப்பணியிடும் பணிக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் சந்தேகம் உள்ளது’ எனத் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் கேரள உயர்நீதிமன்றம் சட்ட ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. வெங்கடேஷ் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக 90 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாதது ஏன் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. 

Advertisment

இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாகச் சிறப்புப் புலனாய்வுக் குழுவானது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதோடு அமலாக்கத்துறையும் இந்த வழக்கைக் கையில் எடுத்திருந்தது. இந்நிலையில் சபரிமலையில் தங்கம் திருட்டு வழக்கில் மலையாள நடிகர் ஜெயராமிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். அதாவது சபரிமலையில் இருந்து கொண்டுவரப்பட்ட தங்கத் தட்டுகள் சென்னையில் உள்ள அவருடைய இல்லத்தில் வைத்து பூஜை செய்யப்பட்டதாகவும், இது தொடர்பாகச் சிறப்புப் புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தினர்.  

sabarimalai-gold

நடிகர் ஜெயராம் அளித்த வாக்குமூலத்தில், “கடந்த 40 ஆண்டுகளாகச் சபரிமலை சென்று வருவதால் உன்னிகிருஷ்ணன் போத்தியுடன் பழக்கம் ஏற்பட்டது. சபரிமலை சன்னிதான கதவுக்கான தங்கத் தகடுகளை வீட்டுக்கு எடுத்து வந்து பூஜித்தால் வளம்பெறும் என உன்னிகிருஷ்ணன் போத்தி கூறினார்” எனக் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் அவர் சாட்சியாகவும் சேர்க்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  முன்னதாக இந்த வழக்கில் கைதான உன்னிகிருஷ்ணன் போத்தி, நடிகர் ஜெயராம் வீட்டுக்குத் தங்க தகட்டுடன் சென்று பூஜை செய்ததாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Advertisment