பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையாவால் கடந்த 1998 ஆம் ஆண்டு கேரளா தேவஸ்தானம் போர்டுக்கு 30 கிலோ தங்கம் நன்கொடையாக வழங்கப்பட்டது, அதன் அடிப்படையில் அந்த தங்கமானது தங்கக் கவசமாக மாற்றப்பட்டது. இதனையடுத்து தங்கக் கவசத்தை செப்பனிட்டுக் கொடுப்பதாகக் கூறி பெங்களூருவைச் சேர்ந்த உன்னி கிருஷ்ணன் போத்தி என்பவரிடம் தேவஸ்தானம் சார்பில் நகைகள் கொடுக்கப்பட்டது. அதன்படி தங்கக் கவசம் செப்பனிடப்பட்டு, அதனைத் தேவஸ்தானம் போர்டு திரும்பப் பெற்றுக் கொண்டது.
இத்தகைய சூழலில் தான் கடந்த மாதம் கேரளா உயர் நீதிமன்றத்தில் சபரிமலை கோவில் சிறப்பு ஆணையர் உயர் நீதிமன்ற அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், ‘என்னிடம் எவ்வித அனுமதியும் பெறாமல் தங்கக் கவசம் செப்பணியிடும் பணிக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் சந்தேகம் உள்ளது’ எனத் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் கேரள உயர்நீதிமன்றம் சட்ட ஒழுங்கு கூடுதல் டிஜிபி வெங்கடேஷ் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் உன்னி கிருஷ்ணன் போத்தி என்பவர் சென்னை அம்பத்தூர் பகுதியில் உள்ள நிறுவனத்திடம் தங்கக் கவசத்தைச் செப்பனிடும் பணிக்காகக் கொடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில் கூடுதல் டிஜிபி வெங்கடேசன் தலைமையில் போலீசார் கடந்த 13ஆம் தேதி (13.10.2025) காலை அம்பத்தூர் பகுதியில் உள்ள சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டு அதன் அடிப்படையில் சுமார் 12 மணி நேரமாக விசாரணை நடைபெற்றது. இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கிடையே உன்னிகிருஷ்ணன் போத்தி, முறைகேட்டில் ஈடுபட்ட தங்கத்தை கர்நாடக மாநிலம் பெல்லாரி பகுதியில் உள்ள நகைக்கடை உரிமையாளர் கோவர்தனன் என்பவரிடம் கொடுத்ததாக கூறப்பட்டது.
இதனையடுத்து சிறப்பு புலனாய்வு குழுவினர் கர்நாடகாவில் முகாமிட்டு விசாரணையை தொடங்கியுள்ளனர். அதாவது கோவர்தனன் வீட்டில் இன்று (25.10.2025) சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் போது 400 கிராம் தங்கம் கோவர்தனன் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகவும், பல்வேறு முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக சிறப்பு புலனாய்வு குழுவினர் தெரிவித்துள்ளனர். அதே சமயம் இந்த சோதனைக்கு பிறகு கோவர்தன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, “எனது வீட்டிலிருந்து தங்க நகைகள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. ஆவணங்களை மட்டுமே அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்” எனத் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
Follow Us