இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தியா - ரஷ்யா நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் அஜித் தோவல் மாஸ்கோவில் உள்ளார். இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இம்மாத (ஆகஸ்ட்) இறுதியில் இந்தியாவுக்கு வருகை தருவார் என அஜித் தோவல் வியாழக்கிழமை மாஸ்கோவில் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு (2024), பிரதமர் நரேந்திர மோடி 3வது முறையாகப் பதவியேற்ற பிறகு ஜூலை மாதம் நடைபெற்ற 22வது இந்தியா - ரஷ்யா உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள மாஸ்கோவிற்கு சென்றபோது ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேசினார். அதன் பின்னர் கடந்த அக்டோபர் மாதம் ல் பிரதமர் மோடி பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 2 நாள் பயணமாக ரஷ்யாவொன் கசானுக்குச் சென்றபோது இரு தலைவர்களும் சந்தித்து பேசினர். அதே சமயம் கடந்த 2022ஆம் ஆண்டு உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் தொடங்கியதில் இருந்து அதிபர் புதின் இந்தியாவிற்கு வருகை தருவது இதுவே முதல் முறையாகும்.
முன்னதாக இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்காவில் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 25% வரி விதிக்கப்படும் என அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்தியப் பொருட்கள் மீது மேலும் 25% வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அறிவித்துள்ளது. ஏற்கனவே 25% வரி விதிக்கப்பட்ட நிலையில் கூடுதலாக 25% வரியை அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் விதித்துள்ளார். இதன் மூலம் இந்தியப் பொருட்கள் மீதான வரியை 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிபர் டிரம்ப் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “ரஷ்யாவிடமிருந்து எண்ணெய்யை வாங்கி அதனைச் சந்தையில் விற்கும் போது அதிக அளவில் இந்தியா வருவாய் ஈட்டுகிறது. எனவே ரஷ்யாவில் இருந்து அதிக அளவிலான எண்ணெய்யை வாங்குவதால் இந்தியாவின் மீதான வரி மேலும் அதிகரிக்கப்படும். ரஷ்யாவின் தாக்குதல் காரணமாக உக்ரைன் நாட்டு மக்கள் கொல்லப்படுவதை இந்தியா கருத்தில் கொள்ளவில்லை” எனத் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.