சுவிட்சர்லாந்த் நாட்டின் ஜெனீவா நகரில், ஓமன் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் தலைமையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அணு சக்தி ஒப்பந்தம் குறித்தான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து கடந்த சனிக்கிழமை (28.02.2026) அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டாகச் சேர்ந்து ஈரான் மீது தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் பதில் தாக்குதலை நடத்தி வருகிறது. தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த தாக்குதலின் விளைவாக ஹார்மோஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது. இதன் காரணமாக, நூற்றுக்கணக்கான கப்பல்கள் இந்த நீரிணையைக் கடக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பாரசீக வளைகுடாவையும், அரபிக்கடலையும் இணைக்கும் இந்த நீரிணை, கப்பல் போக்குவரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகப் பார்க்கப்படுகிறது.
இந்த சுழலில், மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் கச்சா எண்ணெய்யில் 40 சதவீதம் இந்த நீரிணை வழியாகவே வருகிறது. இந்த நீரிணை மூடப்பட்டதையடுத்து, கச்சா எண்ணெய் வரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அடுத்த 25 நாட்களுக்குத் தேவையான கட்சா எண்ணெய் கையிருப்பு இருப்பதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த நிலை தொடர்ந்து நீடித்தால், பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த நெருக்கடியான சூழலைச் சமாளிக்க இந்தியக் கடற்பகுதிக்கு அருகில் உள்ள 95 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் இருக்கும் கப்பல்களை இந்தியாவிற்கு அனுப்பத் தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இந்த கப்பல்கள் ஒரு வாரத்தில் இந்தியாவை வந்து சேரும் என்று ரஷ்ய அதிகாரி பிரபல செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், இந்த போர் தொடர்ந்து நீடித்தால், எரிபொருள் தேவைக்காக அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து மத்திய அரசு அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தற்போது, இந்தியாவில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில், நாளொன்றுக்கு 56 லட்சம் பீப்பாய்கள் பதப்படுத்தப்படுகின்றன. கடந்த காலங்களில் ரஷ்யாவிடம் அதிக அளவில் எண்ணெய் கொள்முதல் செய்து வந்த இந்தியா சமீபத்தில் அமெரிக்காவின் நெருக்கடி காரணமாக, ரஷ்ய எண்ணெய் கொள்முதல் அளவை குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)
/nakkheeran/media/media_files/2026/03/05/crude-oil-img-2026-03-05-13-11-08.jpg)