புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு கிழக்கு கிராமத்தைச் சேர்ந்தகள் செல்வராஜ் - செல்வகுமாரி தம்பதியினர். இவர்களது மகன் தான் மாணவர் விவேக்கீஸ்வரன். அரசு பள்ளிகளில் படித்து வந்த இவர், 8, 9ஆம் வகுப்புகள் படிக்கும் போது திறனாய்வுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று அரசின் ஊக்கத் தொகையும் பெற்றார். 10, 11, 12 ஆம் வகுப்புகளில் பள்ளியில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்ற விவேக்கீஸ்வரனுக்கு சிறு வயதில் இருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்று கனவு இருந்திருக்கிறார். ஆனால், அதற்கான பயிற்சி மையம் செல்ல பண வசதி இல்லை. அதனால் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்பைத் தொடர்ந்தவர். தனது படிப்புச் செலவிற்காக கீரமங்கலத்தில் உள்ள ஒரு மர அறுவை மில்லில் விடுமுறை நாட்களில் வேலை செய்து கிடைக்கும் சம்பளத்தில் படித்து வந்துள்ளார்.
இளங்கலை படித்தாலும் மருத்துவர் ஆகும் கனவு அப்படியே இருந்திருக்கிறது. நீட் தேர்வையும் எழுதியிருக்கிறார். கடந்த ஆண்டு காரைக்குடியில் ஒரு தனியார் பயிற்சி மையத்தில் இலவசப் பயிற்சி பெற்று 487 மதிப்பெண் பெற்றாலும், மருத்துவம் படிக்க இடம் கிடைக்கவில்லை. கல்லூரி இளங்கலைப் படிப்பும் முடிந்தது. ஆனாலும் தனது முயற்சியை விடாத மாணவன், இந்த ஆண்டு நீட் எழுதி 427 மதிப்பெண்கள் பெற்ற போது முதல் 2 கலந்தாய்வுகளிலும் சீட் கிடைக்காமல் போனது. இந்த நிலையில் தான், 3ஆவது கலந்தாய்வில் முதல் சீட் இந்த மாணவனுக்கு கிடைத்து திருச்சி தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார்.
பல தடைகளைத் தாண்டி அரசின் சலுகைகளைப் பெற்று படித்து தனது மருத்துவக் கனவை நிறைவேற்றிக் கொண்ட மாணவன் விவேக்கீஸ்வரன் கல்லூரி செல்ல உள்ள நிலையில் வழக்கம் போல மர அறுவை ஆலையில் வேலை செய்து கொண்டிருந்த போது அவரைச் சந்தித்தோம். “ரொம்ப ஏழ்மையான குடும்பம். ஆனாலும் எங்களைப் பெற்றோர் படிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். படிப்புதான் உங்களை உயர்த்தும் என்றனர். நானும் எங்க அண்ணனும் நல்லா படிச்சோம். மாணவர்களின் படிப்பிற்காக அரசு கொடுத்த அத்தனை சலுகைகளும் எங்கள் படிப்பிற்கு உதவியது. மேற்பனைக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் சில ஆசிரியர்களின் ஊக்கம் என்னைத் திறனாய்வுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற வைத்து ஊக்கத் தொகை கிடைத்தது. படிப்பிலும் முதல் மாணவன் நான்.
ஆனால், மேற்படிப்பிற்கு வசதி இல்லை. குடும்பத்தினரைச் சிரமப்படுத்த வேண்டாம் என்று மரமில்லில் வேலைக்குச் சென்று வாங்கும் சம்பளத்தில் படிப்பைத் தொடர்ந்தேன். முதலில் நீட் எழுத ஆசை. ஆனால், வழிகாட்ட ஆள் இல்லை. அப்போதுதான் எங்க உடற்கல்வி ஆசிரியர் ரவிக்குமார் வழிகாட்டினார். அதன்படி படிப்பும் வேலையும் தொடர்ந்தது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு காரைக்குடியில் இலவச நீட் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து தேர்ச்சி பெற்று இப்போது 7.5% உள் இடஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரி மாணவராகிவிட்டேன். அரசுச் சலுகைகள் எனக்கு ரொம்பவே உதவியாக இருந்தது” என்றார்.
மேலும், “ஒரு இலக்கை அடைய விடா முயற்சி வேண்டும் என்பதை என் சொந்த அனுபவத்தில் உணர்ந்தேன். இந்த முறை எம்.பி.பி.எஸ். சீட் கிடைக்கவில்லை என்றால் குரூப் தேர்வுகள் எழுதத் தயாரானேன். அதற்கு திருத்துறைப்பூண்டி டி.எஸ்.பி. பவானியா மேடம் வழிகாட்டினார். ஆனால், இப்போது மருத்துவ சீட் கிடைத்துவிட்டது. இந்தப் படிப்பை முடித்துவிட்டு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவேன். அதிலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.
விடுமுறை நாட்களில் மர அறுவை மில்லில் வேலை செய்து விடாமுயற்சியாக நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று எம்.பி.பி.எஸ். படிக்கச் செல்லும் கிராம புற மாணவன் விவேக்கீஸ்வரனுக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
Follow Us