RSS leader said If you are 75 years old, give way to other as Prime Minister Modi near 75
குஜராத் மாநில முதல்வராக பதவி வகித்து வந்த நரேந்திர மோடி கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அந்த தேர்தலில் அக்கட்சி வெற்றி பெற்று தனிப்பெரும்பாண்மையுடன் ஆட்சி அமைத்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 2019 மற்றும் 2024 என அடுத்தடுத்து நடைபெற்று மக்களவைத் தேர்தல்களிலும் பா.ஜ.க. வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக மோடி பதவி வகித்து வருகிறார். மற்றொரு புறம் பா.ஜ.க.வில் 75 வயதுக்கு மேல் உள்ளவர்கள், ஆட்சியிலும் கட்சியிலும் பதவி வகிக்க கூடாது என்ற விதி உள்ளது. இத்தகைய சூழலில் தான் பிரதமர் மோடிக்கு வரும் செப்டம்பர் 17ஆம் தேதியுடன் 75 வயது நிறைவடைய உள்ளது. இதனால் பிரதமர் மோடி தனது பதவியில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அவ்வப்போது பேச்சுகள் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில், 75 வயதானால் மற்றவர்களுக்கு வழி விடுங்கள் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். கடந்த 9ஆம் தேதி நாக்பூரில் மறைந்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோரோபந்த் பிங்கிளே குறித்து எழுதிய புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “உங்களுக்கு 75 வயதாகும் போது இப்போதே நிறுத்திவிட்டு மற்றவர்களுக்கு வழிவிட வேண்டும். 75 வயதை எட்டியப் பிறகு உங்களுக்கு சால்வை அணிவிக்கப்படும். அப்படியென்றால் உங்களுக்கு வயதாகிவிட்டது, நீங்கள் விலகி மற்றவர்களுக்கு வழிவிட வேண்டும் என மோரோபந்த் பிங்கிளே கூறியிருக்கிறார்” எனத் தெரிவித்தார்.
பிரதமர் மோடி மற்றும் மோகன் பகவத் ஆகிய இருவரும் செப்டம்பரில் 75 வயதை எட்டுகிறார்கள். இந்த சூழ்நிலையில், மோகன் பகவத்தின் இந்த கருத்து தற்போது அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது கருத்துக்கு சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத் உடனடியாக பதிலளித்த, “அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் ஜஸ்வந்த் சிங் போன்ற தலைவர்கள் 75 வயதை எட்டிய பிறகு பிரதமர் மோடி அவர்களை ஓய்வு பெற கட்டாயப்படுத்தினார். அதே விதியை அவர் இப்போதும் தனக்கு பயன்படுத்துகிறாரா என்று பார்ப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
மூன்றாவது முறையாக பிரதமர் பதவியை ஏற்ற பிறகு கடந்த மார்ச் மாதம் ஆர்.எஸ்.எஸ் தலைமையிகத்திற்கு பிரதமர் மோடி சென்றிருந்தார். அப்போது கருத்து தெரிவித்த சஞ்சய் ராவத், “எனக்குத் தெரிந்தவரை, அவர் 10 முதல் 11 ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்திற்கு ஒருபோதும் சென்றதில்லை. பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறகு யார் என்பதை ஆர்.எஸ்.எஸ். தான் முடிவு செய்யும். பிரதமர் மோடி ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்திற்கு சென்றதற்கு காரணம் இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் தலைமைத்துவத்தில் மாற்றத்தை விரும்புகிறது. அதாவது பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே அங்கு சென்றார்” என்று கூறினார். ஆனால், பிரதமர் மோடி வரும் 2029 வரை தொடர்ந்து தலைவராக நீடிப்பார் என்று ஏற்கெனவே மத்திய உள்துறை அமைச்சர் உறுதியாகக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.