ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டை முன்னிட்டு ‘ஆர்.எஸ்.எஸ். - 100’ என்ற தலைப்பில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கருத்தரங்க கூட்டங்கள் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக டெல்லியில் இன்று (28.08.2025) கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகத் கலந்து கொண்டு பல்வேறு கருத்துக்களை முன்வைத்துள்ளார். அதில், “பாஜக விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ். முடிவெடுப்பதில்லை. பாஜகவிற்கு ஆலோசனை மட்டுமே தருகிறோம். அது தொடர்பாக இறுதி முடிவுகள் எடுப்பதில் நாங்கள் தலையிடுவது இல்லை. பாஜக ஆர்எஸ்எஸ் என்பது ஷாக்காக்களை வழி நடத்துவதில் வல்லமை பெற்றவர்கள்.
பாஜக என்பது அரசை ஒழுங்காக நடத்துவதில் வல்லமை பெற்றவர்கள். ஆர்எஸ்எஸ் சார்பில் நாங்கள் பரிந்துரைகளை மட்டுமே வழங்க முடியும். ஆனால் அதன் தொடர்பான முடிவுகளை பாஜக தான் நிபுணர்களின் ஆலோசனைப்படி எடுப்பார்கள். இந்தியாவில் எந்த ஒரு இந்துவும் இஸ்லாம் இருக்கக்கூடாது என்று நினைப்பதில்லை. அனைவரும் இங்கு இருக்க வேண்டும் என்று தான் இங்கு இருக்கக்கூடிய இந்துக்கள் நினைக்கின்றனர். ஆர்.எஸ்.எஸ். மதத்தின் அடிப்படையில் யாரையும் தாக்குவதில் நம்பிக்கை உடையவர்கள் அல்ல. பிரிவினைக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். போராட்டம் நடத்தவில்லை என்பது தவறான தகவல். பிரிவினைக்கு ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் அந்த நேரத்தில் ஆர்.எஸ்.எஸ். சங்கத்திற்கு என்ன அதிகாரம் இருந்தது?. அகண்ட பாரதம் ஒரு உண்மை ஆகும்.
இந்தியாவின் மக்கள்தொகை கொள்கை 2.1 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளப் பரிந்துரைக்கிறது. எனவே இந்தியர்கள் 3 குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். அதாவது ஒரு குடும்பத்தில் 3 குழந்தைகள் இருக்க வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் தனது குடும்பத்தில் 3 குழந்தைகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஈகோவை சரி செய்வது எப்படி என்பதை இந்த 3 குழந்தைகளும் கற்றுக்கொள்வார்கள். ஒரு குடும்பத்தில் 3 குழந்தைகள் இருக்கும்போது அவர்களிடம் ஈகோ இருக்காது” எனத் தெரிவித்தார். மேலும், “பாஜகவைத் தவிர மற்ற அரசியல் கட்சிகளை ஆர்.எஸ்.எஸ். ஏன் ஆதரிக்கவில்லை?” என்ற கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக மோகன் பகவத் கூறுகையில், “நல்ல வேலைக்காக எங்களிடம் உதவி கேட்பவர்களுக்கு நாங்கள் உதவி வழங்குகிறோம். நாம் உதவி செய்ய முயலும்போது, நம்மை விட்டு ஓடிப்போனவர்களுக்கு பெரும்பாலும் அவர்களுக்குத் தேவையான உதவி கிடைப்பதில்லை. எனவே நாம் என்ன செய்ய முடியும்?. ஆனால் சில நேரங்களில், நாட்டை நடத்துவதற்கோ அல்லது ஒரு கட்சியின் பணிகளை மேற்கொள்வதற்கோ, அது நன்றாக இருந்தால், எங்கள் தன்னார்வலர்கள் சென்று உதவுவார்கள். எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. முழு சமூகமும் நம்முடையது” எனப் பேசினார்.