தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவியை மேற்கு வங்க ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். அதே சமயம் கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு கூடுதல் பொறுப்பாக தமிழ்நாடு ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் யார் இந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் என்ற கேள்வி தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கோவாவில் உள்ள பனாஜியில் விஸ்வநாத் அர்லேகர் - திலோத்தம்மா அர்லேகர் ஆகியோரின் மகனாகக் கடந்த 1954ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பிறந்தார். இவர் தனது பள்ளிப் படிப்பைக் கோவாவின் வாஸ்கோடகாமாவில் உள்ள செயின்ட் ஜோசப் கல்வி நிறுவனத்திலும், வணிகவியல் பட்டப்படிப்பை வாஸ்கோடகாமாவில் உள்ள எம்.இ.எஸ். கல்லூரியிலும் முடித்தார். அவரது பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில், அவர் ஒரு மிகச்சிறந்த மாணவராக இருந்ததாக அவரது ஆசிரியர்களும் பேராசிரியர்களும் நினைவு கூர்கின்றனர்
சிறுவயதின் ஆரம்பக்காலத்தில், ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்துடன் (RSS) தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். அதன் பின்னர் 1989ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக இணைந்தார். இதற்கிடையில் இந்தியாவில் நெருக்கடி நிலை காலத்தில் (1975 - 1977), தனது தந்தையுடன் சிறை சென்றுள்ளார். மக்களின் அரசியல் பிரதிநிதியாகக் கடந்த 2002ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை என 5 ஆண்டுகள் கோவா சட்டப்பேரவை உறுப்பினராக அர்லேகரின் பதவி வகித்தார். அப்போது அவர் சமூகப் பிரச்சினைகள், வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தியதாகக் கூறப்படுகிறது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/03/06/rv-arlekkar-1-2026-03-06-08-09-47.jpg)
மற்றொருபுறம் கட்சியில், கடந்த 2003ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை என நான்கு ஆண்டுகள் கோவா மாநில பாஜக தலைவராகவும் இவர் பணியாற்றினார். மேலும் 2012 முதல் 2017 வரை கோவா சட்டப்பேரவையின் சபாநாயகராகப் பதவி வகித்துள்ளார். அப்போது, இந்தியாவிலேயே காகிதமில்லா முறையை (Paperless system) பின்பற்றிய முதல் சட்டப்பேரவையாக அதை மாற்றிக் காட்டியுள்ளார். இவரின் இந்த தொலைநோக்கு பார்வை நாடு தழுவிய அள்வில் பாராட்டைப் பெற்றது. அதோடு இவர் கோவாவில் வனம், சுற்றுச்சூழல் மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
இதனையடுத்து கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் இமாச்சலப்பிரதேசத்தின் 21வது ஆளுநராக அர்லேகர் நியமிக்கப்பட்டார். அப்போதில் இருந்து 2023ஆம் ஆண்டு வரை அப்பதவியில் இருந்து வண்ட்தார். அதன் தொடர்ச்சியாகப் பிப்ரவரி 2023இல், பீகாரின் 30வது ஆளுநராகப் பொறுப்பேற்றார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் தேதி (02.01.2025) அன்று கேரளாவின் 23வது ஆளுநராகப் பதவியேற்றார். இவருக்கு அனகா அர்லேகரை என்ற மனைவியும், இந்தத் தம்பதியினருக்கு அதிதி குல்கர்னி என்ற மகளும், அமோக் அர்லேகர் என்ற மகனும் உள்ளனர்.
Follow Us